கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

முகம் என்பது மனிதர்களை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்று. முகம்தான் மனிதர்களின் அடையாளமாகவும் திகழ்கிறது. எனவேதான் பெரும்பாலானவர்கள் முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அத்தகைய முகத்திற்கு மேலும் அழகினை சேர்ப்பது என்றால் அது முகத்தில் இருக்கும் கண்கள்தான்.

கண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் முகத்தின் அழகும் மிளிரும். ஆனால், சிலருக்கு ஒருசில காரணங்களால் கண்களை சுற்றி கருவளையம் வந்து முகத்தின் அழகையே கெடுக்கும் வகையில் இருக்கும். இந்த கருவளையங்கள் ஏன் ஏற்படுகிறது. அதனை தடுக்கும் வழிகள் என்னவென்று பார்ப்போம்.

கருவளையம் வர காரணம்

மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இதுபோன்ற காரணங்களினால்தான் கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. அதுபோன்று, கண்களில் நீர்சத்து குறைந்து போனாலும் கண்களைச் சுற்றி கருவளையம் வரும் வாய்ப்பு அதிகம். இதில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப காரணங்கள் வேறுபட்டு ஒருவருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றுகிறது.

கருவளையம் வராமல் தடுக்கும் வழிகள்

கண்களைச் சுற்றி கருவளையம் வருவதை தடுக்க, ஆரோக்கியமான சரிவிகித உணவு முறைக்கு மாற வேண்டும். குறிப்பாக, ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, பப்பாளி, முட்டைகோஸ், ஆரஞ்சு, முருங்கைக் கீரை, கேரட் போன்ற உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலே கண்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, கண்களைச் சுற்றி கருவளையம் என்பதே எட்டி பார்க்காது.

நல்ல தூக்கம்

இன்றைய சூழலில், பலவித காரணங்களாலும், வாழ்க்கைமுறை மாற்றத்தாலும் பெரும்பாலானவர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவதற்கு தூக்கமின்மையும் ஒரு முக்கிய காரணியாகும். எனவே, சரியான தூக்க முறையை கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக, ஒருநாளைக்கு நாம் அனைவரும் தூங்க வேண்டிய சராசரியான 8 மணி நேர தூக்கத்தினை தூங்கவில்லை என்றால் கண்களில் கருவளையம் வரும். ஆகையால் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணிநேரம் தூங்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது நல்ல ஆழ்ந்த தூக்கத்தினை மேற்கொள்ள வேண்டும்.

கண்களை தேய்ப்பது

பொதுவாக கண்களுக்கு மையிடும்போதும், கிரீம் பயன்படுத்தும் போதும் அல்லது கண்களில் இருக்கும் மையினை அகற்றும் போதோ அல்லது கிரீமினை அகற்றும் போதோ கண்களுக்கு கீழே இருக்கும் பகுதியினை பொறுமையாக கையாள வேண்டும். ஏனென்றால், கண்களுக்கு கீழ் உள்ள பகுதிகள் மிகவும் மென்மையாக இருக்கும். எனவே, மிகவும் அழுத்தம் கொடுக்காமல் நிதானமாகவும், மென்மையாகவும் கையாள வேண்டும். இவ்வாறு செய்யாமல் அதிகமாக அழுத்தம் கொடுத்து தேய்ப்பதனால் கண்களில் கருவளையம் வர வழிவகுக்கிறது. அதனால் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

கண்களை மசாஜ் செய்தல்

பொதுவாக கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மசாஜ் செய்வது என்பது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அதுபோன்று, கண்களைப் பாதுகாக்க உதவும் யோகா பயிற்சிகளை மேற்கொள்வதும் கண்களின் ஆரோக்கியத்தை காக்கும்.

எனவே, தினசரியோ அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது கண்களுக்கு மசாஜ் செய்வதையும் கண்களுக்கான பயிற்சிகள் மேற்கொள்வதையும் நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால், கண்களைச் சுற்றி கருவளையம் வருவதை தடுக்க முடியும். அதுபோன்று, கண்களில் நீர்சத்து அதிகமாக ஆகிவிட்டது என்றால் கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் போன்றவை ஏற்படும். ஆனால் நாம் கண்களை மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படியான நீர்சத்து ஏற்படுவதை தடுத்து கருவளையம் ஏற்படுவதையும் தடுக்கும்.

கண் வறட்சி

சமீபகாலமாகவே, பலருக்கும் கண்ணில் வறட்சி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், அதிகநேரம் டிவி பார்ப்பது, கணினியில் வேலை பார்ப்பது, மொபைல் போனை அதிக நேரம் பார்ப்பது போன்றவற்றால் கண் வறட்சி ஏற்படுகிறது. மேலும், உடலில் நீரிழப்பு அதிகரிக்கும்போது கண் வறட்சி ஏற்படுகிறது. இவ்வாறு கண்வறட்சி ஏற்படும்போது கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. எனவே, கண் வறட்சி ஏற்படாமல் அவ்வப்போது கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுக்க வேண்டும். மேலும் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மூலம் கண் வறட்சியை தடுக்கலாம். கண் வறட்சியை தடுத்தாலே கண்களைச் சுற்றி கருவளையம் வருவது தடுக்கப்படும்.

தொகுப்பு: ரிஷி

The post கண் கருவளையம் தடுக்கும் வழிகள்! appeared first on Dinakaran.

Related Stories: