இளம்நரைக்குத் தீர்வு

நன்றி குங்குமம் தோழி

இப்போதெல்லாம் இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பதால், இளம் தலைமுறை பலருக்கும் இது மன உளைச்சலையும், அவர்களின் பெற்றோருக்கு கவலையையும் அளிக்கிறது. முதல் நரைமுடி 30 வயதிற்கு மேல் வருவது முதுமையின் அடையாளங்களில் ஒன்று. ஆனால் 40 முதல் 50 வயதுக்குள்தான் பொதுவாக தலைமுடி அதிகமாக நரைக்க ஆரம்பிக்கும். விளைவு, சந்தைகளில் கிடைக்கும் விதவிதமான ஹேர் டைகளையும், ஹேர் டை ஷாம்புகளை வாங்கி துரிதகதியில் அவற்றை பயன்படுத்துகின்றனர். ஹேர் டை பயன்பாட்டால் வரக்கூடிய விளைவு குறித்து இங்கே யாரும் பெரிதாக யோசிப்பதில்லை.

இந்த நிலையில், இளம் வயதில் நரைமுடி பிரச்னை இளம் தலைமுறைக்கு ஏன் வருகிறது. இயற்கை முறையில் இதனைச் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் இருக்கும் தீர்வுகள் என்ன என்பது குறித்து சித்த மருத்துவ நிபுணரான மானக்சாவிடம் பேசியதில்…

இளம் வயதில் நரைமுடி வரக் காரணம் என்ன?

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணமாகப் பார்க்கப்படுவது, முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் ‘மெலனின்’ என்கிற நிறமி குறைபாடே. விட்டமின் B12 குறைபாடு மெலனின் உற்பத்தியை மெதுவாக பாதிப்படையச் செய்கின்றது. மேலும் நமக்கு வயது ஏற ஏற உடலில் இருக்கும் மெலனின் குறைய ஆரம்பித்து நரை முடி வளர்ச்சியை தூண்டும். இப்போதெல்லாம் இந்த மெலனின் குறைபாடு, இளம் வயதினருக்கும் ஆரம்பித்து சின்ன வயதிலேயே நரை முடி வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இளம்நரை வளர்ச்சிக்கு வேறு காரணங்களும் இருக்கிறதா?

மூளையில் உள்ள பீனியல் சுரப்பி ‘மெலட்டோனின்’ என்கிற ஹார்மோனை இரவு நேரத்தில் மட்டுமே சுரக்கும். பீனியல் சுரப்பியை ஆன்மாவின் இருப்பிடம் (Seat of the Soul) என்றும் குறிப்பிடுவர். இன்றைய இளம் தலைமுறையினர், இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து செல்போன் பார்ப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற காரணங்களால், அவர்களின் இயல்பான தூக்கம் தடைபடுவதுடன் மெலட்டோன் சுரப்பும் தடைபடுகிறது.

விட்டமின் D, விட்டமின் E, விட்டமின் பி12, பயோட்டின், போலிக் அமிலம் குறைபாடுகள், முடி உதிர்வு, நரைமுடி வளர்ச்சி போன்றவற்றைத் தூண்டுகிறது. அதேபோல் இரும்பு, தாமிரம், கால்சியம், துத்தநாகம் போன்றவற்றின் குறைபாடும் முடி உதிர்வு, நரை முடி பிரச்னைக்கு காரணமாக இருக்கின்றது.மேலும், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் சிகரெட்டில் உள்ள நச்சுப் பொருளான நிகோட்டின் ரத்தத்தில் கலந்து நரைமுடி உருவாவதைத் தூண்டுகிறது. அதிகரித்த உடல் வெப்பம், தொழில் புரியும் இடங்களில் உள்ள வெப்பம், வேதிப்பொருள் (Chemical) பயன்பாடு, தொழிற்சாலைகளில் பணிபுரிதல் போன்ற காரணிகளும் நரைமுடி வளர்ச்சியை தூண்டுகின்றது.

ஒருசிலர் தலைக்கு சரியாக எண்ணெய் தடவாமல், விதவிதமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவும் தோல் சுரப்பிகள் எண்ணெய் பசையை (Sebum) சுரக்காமல் முடி உதிர்தல் மற்றும் நரை முடி உருவாகக் காரணமாக அமைகின்றது. கூடவே நரைமுடி பிரச்னைக்கு நமது பரம்பரையும் முக்கிய காரணமாக இருக்கலாம். வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அதற்கு முந்தைய தலைமுறை என நம்மோடு சேர்த்து ஏழு தலைமுறைக்கு யாரேனும் ஒருவருக்கு நரைமுடி பிரச்னை இருந்தாலும் அது நம்மையும் தொடரக் கூடும்.

இளநரைக்கு சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வு…?

வெள்ளைக் கரிசாலைச் சாறு 100 மி.லி, கறிவேப்பிலைச் சாறு 100 மி.லி, நெல்லிக்காய் சாறு 100 மி.லி, நீல அவுரி சாறு 100 மி.லி, நாட்டு செம்பருத்திப்பூ 25, கருஞ்சீரகம் 10 கிராம், கார்போகரிசி 10 கிராம், அரைக்கீரை விதை 10 கிராம் இத்துடன் தேங்காய் எண்ணெய் 1 லிட்டர் இணைத்து, மேலே குறிப்பிட்டுள்ள சாறுகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு செம்பருத்தி பூ மற்றும் பொடி செய்த மற்றவற்றையும் இணைத்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி எடுக்க வேண்டும். இந்தத் தைலத்தை தலைமுடியில் தேய்த்துக் குளித்துவர இளம்நரை நீங்கும். மேலே குறிப்பிட்டுள்ள மருந்துப் பொருட்கள் எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.

நரைமுடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

கெரட்டின்(keratin) என்கிற புரதச் சத்தே தலைமுடி கருத்து வளர இன்றியமையாதது. முட்டையின் வெள்ளை கரு, வேகவைத்த சிவப்புக் கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, பச்சை பட்டாணி, சோயா, மொச்சை, உளுந்து இவைகளைத் தவறாமல் உணவில் இடம்பெறச் செய்ய வேண்டும். இரும்புச்சத்து மிக்க கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய், அரைக் கீரை, தண்டுக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அத்திப் பழம், நாவல் பழம் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையினை கிராமங்
களில் கரிசாலை அல்லது கொடுப்பைக் கீரை என்பர். இதைப் பொடி செய்து, காலை, இரவு என இருவேளை தேனில் கலந்து உண்ண இளநரை நீங்கும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post இளம்நரைக்குத் தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: