அரிசி மூட்டைகளை லஞ்சமாக வாங்கியதாக புகார் ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்கு பதவி உயர்வு: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

சென்னை: ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையில், 1987-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர் வெங்கடேசன். கடந்த 2009ல் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை மறித்து 690 ரூபாயும் 2 அரிசி மூட்டைகளையும் லஞ்சமாக பெற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடந்த துறை ரீதியான விசாரணையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனையாக ஒரு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர் அதிகாரிகளிடம் அவர் செய்த மேல்முறையீடு மனுவும், கருணை கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டன.

இதனால் 2011-12 ஆண்டுக்கான டிஎஸ்பி பதவி உயர்வு பட்டியலில் இவரது பெயர் சேர்கப்படவில்லை. இதன்பின்னர், இவரது பெயர் சேர்கப்பட்டு 2014ல் ஆண்டு டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று 2019ல் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையால் ஜூனியர்கள் தனக்கு முன்பு பதவி உயர்வு பெற்று விட்டனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வெங்டேசன் சார்பில் வழக்கறிஞர் பிரியா ரவி ஆஜராகி, மனுதாரர் லஞ்ச பணமும், அரிசி மூட்டைகளையும் கான்ஸ்டபிள் மூலமாக பெற்றார் என்று குற்றச்சாட்டப்பட்டது.

ஆனால், அந்த கான்ஸ்டபிளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் லாரி டிரைவர் ராமுவிடமும் விசாரிக்க வில்லை என்று வாதிட்டார்.இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், வெங்கடேசனின் ஒரு ஊதிய உயர்வை ரத்து செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு அவருக்கு உரிய பதவி உயர்வு வழங்கி அந்த நாளிலிருந்து ஊதிய உயர்வையும், ஊதிய உயர்வு நிலுவை தொகையையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post அரிசி மூட்டைகளை லஞ்சமாக வாங்கியதாக புகார் ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்கு பதவி உயர்வு: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: