புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு வங்கி அதிகாரி குத்திக்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வங்கி அதிகாரி கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஒடுகம்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் உள்ள பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது ஒடுகம்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும், பள்ளத்துப்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பள்ளத்துப்பட்டியை சேர்ந்த சிலர், கல்லால் தாக்கியதில் ஒடுகம்பட்டியை சேர்ந்த முகமது யாஷின் (21) என்பவர் காயமடைந்தார்.

அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பார்க்க மருத்துவமனை சென்ற ஒடுகம்பட்டியை சேர்ந்த தனியார் வங்கி உதவி மேலாளர் விக்னேஸ்வரன் (27) , கல்லால் தாக்கிய நபர்களிடம் உங்களை சும்மா விடமாட்டேன் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விக்னேஸ்வரன், வீரமணி (25), அரியராஜ் (23) ஆகியோருடன் பைக்கில் கீரனூர் சென்றார். சேமத்துப்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது பைக்கை மறித்த பள்ளத்துப்பட்டியை சேர்ந்த 8பேர் கும்பல், விக்னேஸ்வரனை கம்பியால் குத்தியதோடு, அவருடன் வந்த 2 பேரையும் சரமாரி தாக்கினர்.

ரத்த வெள்ளத்தில் துடித்த விக்னேஸ்வரனை, கம்பியால் குத்தியவர்களே மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், விக்னேஷ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கீரனூர் அரசு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீரனூர் போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினார். இதுகுறித்து வழக்கு பதிந்து ராமலிங்கம் (48) என்பவரை கைது செய்தனர். தலைமறைவான 7 பேரை தேடி வருகின்றனர்.

The post புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு வங்கி அதிகாரி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: