டாக்டர் இறந்ததும் தொடர்ந்து கிளினிக் நடத்தி 8 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கம்பவுண்டர் கைது

*வேலூரில் பரபரப்பு

வேலூர் : வேலூரில் டாக்டர் இறந்ததும் தொடர்ந்து கிளினிக் நடத்தி 8 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கம்பவுண்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தென்ன மரத்தெருவில் மருத்துவத்துறை சார்ந்த ஸ்கேன் சென்டர்கள், ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட பல்வேறு கிளினிக்குகள் இயங்கி வருகிறது. இங்கு மறைந்த பிரபல மருத்துவர் துளசிராமன் நீண்ட காலமாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். அவரிடம் வேலூர் அல்லாபுரம் எழில் நகரை சேர்ந்த தயாளன் என்பவர் உதவியாளராக(கம்பவுண்டர்) பணியாற்றி வந்தார். 9ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தயாளன், கிளினிக்கில் டோக்கன் கொடுப்பது மருத்துவமனையை சுத்தம் செய்வது, நோயாளிகளுக்கு டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் துளசிராமன் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து தன்னை டாக்டர் எனக்கூறிக்கொண்ட தயாளன் கிளினிக்கை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருந்து மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதனால் அவரது கிளினிக்குக்கு நாள்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் மாலை மட்டுமே 4 மணி முதல் 6 மணி வரை சிகிச்சை அளித்து வந்த தயாளன் காலை 8 மணி முதல் 10 மணி வரை கூடுதலாக தினமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

தயாளன் குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பது குறித்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற நோயாளி ஒருவர், அங்கு சிகிச்சை பெற்று நோயாளிக்கு சிபாரிசு செய்துள்ளார். இந்த தகவல் அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியருக்கு தெரியவந்து, முதன்மை மருத்துவ அலுவலரிடம் கூறினார்.இதனால் வேலூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் அனிதா தலைமையில் தெற்கு காவல் நிலைய எஸ்ஐ பிச்சாண்டி அடங்கிய போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் இரவு திடீரென தயாளன் நடந்தி வந்த கிளினிக்குக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 9ம்வகுப்பு மட்டுமே படித்த தயாளன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தபோது கையும் களவுமாக சிக்கினார்.

தொடர்ந்து முதன்மை மருத்துவ அலுவலர் அனிதா அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் தயாளனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரபல மருத்துவரின் கிளினிக்கில் உதவியாளராக இருந்தவர் மருத்துவராக செயல்பட்டு நோயாளிகளுக்கு 8 ஆண்டுகளாக சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டாக்டர் இறந்ததும் தொடர்ந்து கிளினிக் நடத்தி 8 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கம்பவுண்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: