பர்தா அணிந்தபடி நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை கத்தியால் குத்தி தங்க நகைகளை கொள்ளை அடித்துசென்ற மர்ம நபர்கள்

*ஐதராபாத்தில் பட்டப்பகலில் பரபரப்பு

திருமலை : ஐதராபாத்தில் பர்தா அணிந்தபடி பட்டப்பகலில் நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை கத்தியால் குத்தி தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மெட்சல் பகுதியில் தங்க நகை கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று பைக்கில் 2 பேர் வந்தனர். கடைக்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றனர். இருவரில் ஒருவர் பர்தா அணிந்திருந்த நிலையிலும், மற்றொருவர் சாதாரண உடையில் ஹெல்மெட் அணிந்து கடைக்குள் நுழைந்தனர்.

அப்போது நகை வாங்குவது போல் நடித்து சில நிமிடங்களில், முதலில் விற்பனையாளரை பர்தா அணிந்திருந்த ஒருவர் மிரட்டினார். உடனே அவர் உள்ளே சென்ற நிலையில் உரிமையாளரை மிரட்டி கத்தியால் கழுத்தில் குத்தி அவர்கள் கொண்டு வந்திருந்த பைகளில் கடையில் இருந்த தங்க நகைகளை திருடிக்கொண்டு வெளியே ஓடினர். அவசர அவசரமாக வெளியே நிறுத்தி இருந்த பைக்கை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றனர்.

அதற்குள் கடையில் இருந்த விற்பனையாளர் அந்த மர்ம நபர்களை துரத்தி சென்று இரும்பு ஸ்டூலால் தாக்கினார். இருப்பினும் அவர்கள் பைக்கில் தப்பி சென்றனர். பின்னர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை மற்றும் கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மர்ம நபர்களால் படுகாயமடைந்த உரிமையாளரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post பர்தா அணிந்தபடி நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை கத்தியால் குத்தி தங்க நகைகளை கொள்ளை அடித்துசென்ற மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Related Stories: