மத மோதலை தூண்டும் வலைதள பதிவு பாஜ மாவட்ட செயலாளர் கைது

ஆலந்தூர்: மத மோதலை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜ மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். நங்கநல்லூர், கனிகா காலனி, முதல் தெருவை சேர்ந்தவர் கோகுல் நாயுடு (45). இவர், பாஜவில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இஸ்லாமிய பெண், இந்து சாமியாருடன் அமர்ந்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய படத்தை பதிவிட்டு அதில், ‘‘முஸ்லிம் பெண்கள் இந்து ஆண்களை திருமணம் செய்ய வேண்டும். இதன் மூலம் முஸ்லிம் பெண்கள் முத்தலாக், ஹலாலாவில் இருந்து விடுபட்டு தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்” என பதிவிட்டு இருந்தார்.

இந்த சர்ச்சை பதிவை பார்த்த இஸ்லாமியர்கள் பலரும் மத மோதலை உருவாக்க நினைக்கும் இவரை கைது செய்ய வேண்டும் என பதிவு செய்து கண்டனத்தை தெரிவித்தனர். அதன்பேரில், இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை தெற்கு போலீஸ் இணை கமிஷனர் ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், பழவந்தாங்கல் போலீசார், மத மோதலை தூண்டும் வகையில் எழுதுவது, மத உணர்வுகளை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாஜ மாவட்ட செயலாளர் கோகுல் நாயுடுவை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மத மோதலை தூண்டும் வலைதள பதிவு பாஜ மாவட்ட செயலாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: