லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர், உதவியாளர் சிறையில் அடைப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா குன்னலூரை சேர்ந்தவர் சிவதாஸ்(45). மன்னார்குடி அடுத்த ஆலங்கோட்டை டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வீடு அருகே உள்ள கடைக்கு பணி மாறுதல் செய்யுமாறு மாவட்ட மேலாளர் சக்தி பிரேம்சந்தரிடம்(55) 2 மாதங்களுக்கு முன் தெரிவித்தார். அப்போது ரூ.1.10 லட்சம் லஞ்சம் வேண்டுமென சக்தி பிரேம்சந்தர் தெரிவித்தார். அதன்பேரில் 3 தவணையாக ரூ.70 ஆயிரத்தை சிவதாஸ் கொடுத்தார். மீதமுள்ள ரூ.40 ஆயிரத்தை தன்னால் கொடுக்க முடியவில்லையென சிவதாஸ் தெரிவித்தார். அதற்கு சக்தி பிரேம்சந்தர், முழு தொகை கொடுத்தால் மட்டுமே மாறுதல் செய்ய முடியும் என்றார்.

இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிவதாஸ் புகார் செய்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்துடன் மன்னார்குடி சாலை விளமலில் இயங்கும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு சிவதாஸ் நேற்று சென்று அங்கிருந்த உதவியாளர் சரவணனிடம்(45) ரூ.40 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி பூரணி தலைமையிலான போலீசார், சரவணனை பிடித்தனர். பின்னர் சக்தி பிரேம்சந்தரையும் கைது செய்தனர்.விசாரணையில், கடந்த 8ம் தேதி திருத்துறைப்பூண்டியை சேர்ந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர் பாபு, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தனது சாவுக்கு காரணம் மாவட்ட மேலாளர் சக்தி பிரேம்சந்தர் தான் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

தற்போது லஞ்ச புகாரில் சக்தி பிரேம்சந்தர் சிக்கியுள்ளார். திருமக்கோட்டை டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றும் சரவணன், மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளிலிருந்து மாமூல் வசூல், பணியிட மாறுதலுக்கான வசூலை கவனித்து கொள்வதுடன் மாவட்ட மேலாளருக்கு உதவியாளர் போன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் திருவாரூர் கோர்ட்டில் நீதிபதி மகேந்திர வர்மா முன் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். 2 பேரையும் ஜூலை 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் நாகை கிளை சிறையில் சக்தி பிரேம்சந்தர், சரவணன் அடைக்கப்பட்டனர்.

 

The post லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர், உதவியாளர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: