பாலக்காடு அருகே மலையடிவாரத்தில் பதுக்கிய 270 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

பாலக்காடு : பாலக்காடு அருகே செம்ணாம்பதி புளியங்கண்டி மலையடிவாரத்தில் பதுக்கி வைத்திருந்த 270 லிட்டர் எரிசாராயத்தை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல் காரர்களை தேடி வருகின்றனர். கேரள-தமிழக எல்லை கோவிந்தாபுரம் கொல்லங்கோடு சாலையில் செம்ணாம்பதி மலைகிராமம் உள்ளது.

இங்குள்ள புளியங்கண்டி மலையடிவாரப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாகவும், மர்ம கும்பல் தமிழகத்திலிருந்து எரிசாராயம் கடத்தி வந்து கேரளாவில் சப்ளை செய்வதாகவும் கொல்லங்கோடு கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன்பேரில் கொல்லங்கோடு ரேஞ்சு கலால் துறை அதிகாரி சந்தோஷ் தலைமையில் சிறப்புப்படையினர் மலை கிராமப்பகுதிகளில் கடந்த சில நாட்களாவே கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று செம்ணாம்பதி புளியங்கண்டி மலையடிவாரத்தில் நீரோடைப்பகுதியில் 4 அடி பள்ளத்தில் கேன்களில் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 9 கேன்களில் 270 லிட்டர் எரிசாராயத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொல்லங்கோடு ரேஞ்சு அதிகாரிகள் வழக்குப்பதிந்து சாரய கடத்தல் காரர்களை தேடி வருகின்றனர்.

The post பாலக்காடு அருகே மலையடிவாரத்தில் பதுக்கிய 270 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: