நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி மணலியில் பொதுமக்கள் மறியல்

திருவொற்றியூர்: நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி மணலியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டு மற்றும் விச்சூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விச்சூர் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மணலி புதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளக்கரை தெரு, வெள்ளிவாயல் சாவடி, ஆண்டார்குப்பம் போன்ற பல்வேறு பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். விச்சூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், அந்த நிறுவனங்களுக்கு வரக்கூடிய வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன.

இந்நிலையில் இந்த சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்கள் பள்ளங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் பழுதடைந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியமாக மாறியதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பொன்னேரி கோட்டம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த குளக்கரை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று விச்சூர் நெடுஞ்சாலையில் ஒன்று கூடினர். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து சாலையில் தேங்கி இருந்த சகதியில் நின்றவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மணலி புதுநகர் போலீசார் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி மணலியில் பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: