பூந்தமல்லியில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

பூந்தமல்லி: பூந்தமல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் தாங்கல் கரை வாணியர் தெருவில் பழமையான செல்வவிநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கோயில்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த கோயிலை சீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்து, புதிதாக சுதை வேலைப்பாடுகள், வர்ணம் தீட்டுதல், தோரணம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

இதனையடுத்து மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 3ம்தேதி கோபூஜை, கஜபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து, சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க, மூலவர் விமானத்தின் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. பின்னர் துர்க்கை, காலபைரவர், மகா விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் சன்னதிகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விஷேச பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

The post பூந்தமல்லியில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: