நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை குறைப்பு?: ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மே 22ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85ல் இருந்து ரூ.102.63ஆக குறைக்கப்பட்டது. இதுபோல் டெல்லியில் ரூ.96.72, மும்பையில் ரூ.111.35 என குறைக்கப்பட்டது.

அதன்பிறகு இன்று வரை பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை இதுபோல், கடந்த 2022 மே 22ம் தேதி சென்னையில் டீசல் ரூ.94.24 ஆக குறைக்கப்பட்டது. டெல்லியில் ரூ.89.62, கொல்கத்தாவில் ரூ.92.76 என இருந்தது. இதன்பிறகு நேற்றுடன் 587வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், மக்களவை தேர்தலலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: புத்தாண்டுப் பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பு அறிவிப்பை வெளியிட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகமும், நிதியமைச்சகமும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. இதில் எவ்வளவு விலை குறைக்கலாம் என்பது குறித்த பரிந்துரையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மாதத்துக்கு இரண்டு முறை இந்த இரண்டு அமைச்சகங்களும் ஆலோசனை நடத்தி வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர் முதல் 80 டாலருக்குள் உள்ளது. இதனால் விலை குறைப்பு குறித்து முடிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது, என்றனர்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் குறைக்கவில்லை
சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை, மாத சராசரியாக கடந்த 2022 ஏப்ரல் மாதம் 109.34 டாலராக இருந்தது. பின்னர் மே மாதம் 122.84 டாலராக அதிகரித்தது. ஆனால், ஜூன் மாதத்தில் 110.1 டாலர்., எனவும், ஆகஸ்ட்டில் 96.49 டாலர், செப்டம்பரில் 87.96 டாலர் என தொடர்ந்து சரிவை சந்தித்தது.

இந்த ஆண்டு துவக்கத்தில் கூட மார்ச் மாதம் 79.77 டாலராக இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை, ஜூலை, செப்டம்பரில் 95.31 டாலராக உயர்ந்தது. இந்த மாத சராசரி ஸ்பாட் விலை 77.35 டாலராக உள்ளது. இவ்வளவு குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை குறைப்பு?: ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: