நாடாளுமன்றத்தில் அத்துமீறல் வழக்கில் கைதான இளைஞர்கள் பரபரப்பு புகார்: எதிர்கட்சிகளுடன் தொடர்பு என கூறச்சொல்லி மின்சாரம் பாய்ச்சி கொடுமை!!

டெல்லி: எதிர்கட்சிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொள்ள வலியுறுத்தி டெல்லி சிறப்பு காவல்துறையினர் தங்கள் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தியதாக நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் வண்ண குப்பிகள் வீசி அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சாகர் சர்மா, மனோ ரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் தேவி, லலிதா ஜா, மகேஷ் குமாவத் ஆகியோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் நீலம் ஆசாத் தவிர மற்ற அனைவரும் டெல்லி சிறப்பு காவல் துறையினர் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குற்றங்களை ஒப்பு கொள்வதற்கும் சில அரசியல் கட்சிகளின் பெயரை கூற வற்புறுத்தியும் உடலில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். ஒவ்வொருவரிடம் பல்வேறு தருணங்களில் சுமார் 70 வெற்று பக்கங்களில் கையெழுத்திட காவலர்கள் வற்புறுத்தியதாகவும் கூறினர்.

மேலும், உண்மை கண்டறியும் சோதனைகளின் போது சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் பெயரை கூறுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தங்களது சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல், கடவுச்சொற்கள், தொலைபேசிகளுக்கான பயோ மெட்ரிக் தரவுகளை வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 5 பேரின் குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி சிறப்பு காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ள பாட்டியாலா நீதிமன்றம் விசாரணையை பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

The post நாடாளுமன்றத்தில் அத்துமீறல் வழக்கில் கைதான இளைஞர்கள் பரபரப்பு புகார்: எதிர்கட்சிகளுடன் தொடர்பு என கூறச்சொல்லி மின்சாரம் பாய்ச்சி கொடுமை!! appeared first on Dinakaran.

Related Stories: