மாணவ, மாணவிகளுக்கான குறைதீர்ப்பாளர்களை நியமிக்காத பல்கலைக்கழகங்கள் எவை எவை? பட்டியலை வெளியிட்டது யுஜிசி

சென்னை: மாணவர்களுக்கான குறைதீர்ப்பாளர்களை நியமிக்காத பல்கலைக் கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் குறைகள், பிரச்னையை தெரிவிப்பதற்கும், நிவர்த்தி செய்வதற்கும் குறைதீர்க்கும் குழுவையும், அதில் குறைதீர்ப்பாளரையும் நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு (2023) பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உத்தரவு பிறப்பித்தது. குறைதீர்ப்பாளர்களாக மாவட்ட நீதிபதிகள், ஒன்றிய, மாநில பல்கலைக்கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், டீன்கள், துறைத் தலைவர்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் ஆகியோரை குறைதீர்ப்பாளர்களாக நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, பல்கலைக்கழக மானியக்குழுவும் அவ்வப்போது பல்கலைக்கழகங்களை அறிவுறுத்திய வண்ணமும் இருந்தது. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்தும், அவ்வப்போது அறிவுறுத்தியும் வந்த நிலையிலும் நாடு முழுவதும் உள்ள சில பல்கலைக்கழகங்கள் குறைதீர்ப்பாளர்களை நியமிக்காமல் மெத்தனப் போக்கை காட்டி வந்தததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், பல்கலைக்கழகங்களில் குறைதீர்ப்பாளர்களை நியமிக்காத பல்கலைக்கழகங்கள் எவை என்ற பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில், நாடு முழுவதும் 108 அரசு பல்கலைக்கழகங்கள், 2 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், 47 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 157 பல்கலைக்கழகங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் என 3 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இதேபோல், தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டியலிலும் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள் விரைவில் குறைதீர்ப்பாளர்களை தங்கள் பல்கலைக் கழகங்களில் நியமித்து, அதனை யு.ஜி.சி.க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

The post மாணவ, மாணவிகளுக்கான குறைதீர்ப்பாளர்களை நியமிக்காத பல்கலைக்கழகங்கள் எவை எவை? பட்டியலை வெளியிட்டது யுஜிசி appeared first on Dinakaran.

Related Stories: