திருப்பதியில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ஓட்டலில் பரிமாறிய மதிய உணவில் பூரான்

*அதிகாரிகள் நோட்டீஸ்

திருப்பதி : திருப்பதியில் உள்ள பிரபல ஓட்டலில் பரிமாறப்பட்ட மதிய உணவில் பூரான் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஓட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்.

திருப்பதி லீலா மகால் பகுதியில் சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் நிறுவனம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டல் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு திருப்பதிக்கு வரும் பெரும்பாலான வெளியூர் பக்தர்கள் சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சித்தூர் மாவட்டம் புத்தூரை சேர்ந்த ராஜசேகரன் தம்பதியினர் திருப்பதிக்கு வந்தனர். அவர்கள் அந்த ஓட்டலில் மதிய உணவு ஆர்டர் செய்தனர். அவர்களுக்கு சாதம், சப்பாத்தி, சாம்பார், மோர் குழம்பு, ரசம், தயிர், அப்பளம் மற்றும் மோர் மிளகாய் ஆகியவை பரிமாறப்பட்டது.

அப்போது அந்த உணவில் மோர் மிளகாயுடன் இறந்த நிலையில் பூரான் கிடந்தது. இதைக்கண்ட ராஜசேகரன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மோர் மிளகாய் பாத்திரத்தில் பூரான் விழுந்திருக்கலாம் என்றும் அதனை அறியாமல் உணவு சமைப்பாளர் எண்ணெயில் வறுத்து எடுத்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினரிடம் ராஜசேகரன் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அலட்சியமாக பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து திருப்பதி மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ராஜசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உணவு சமைக்கும் கூடம், உணவு பொருட்களை இருப்பு வைக்கும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

ஆனால் அங்கு சுத்தமான முறையில் பாரமரிக்கப்படாதது தெரிந்தது. உடனடியாக ஓட்டல் நிர்வாகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர். இதுதொடர்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர். மோர் மிளகாயுடன் பூரான் பரிமாறப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post திருப்பதியில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ஓட்டலில் பரிமாறிய மதிய உணவில் பூரான் appeared first on Dinakaran.

Related Stories: