ஒன்றிய அரசு நடத்தும் தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் சிறை ரூ.1 கோடி அபராதம்: கடுமையான புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது; நீட், நெட் வினாத்தாள் கசிவுக்கு மத்தியில் திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: நீட், நெட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து, ஒன்றிய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 1 கோடி அபராதம் விதிக்கும் கடுமையான சட்டம் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த மே 5ம் தேதி நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ கல்விக்கான இளநிலை நீட் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது பீகார், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் நடந்தன. பீகார் போலீசார் மட்டும், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 19 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

நடப்பாண்டு ‘நீட்’ தேர்வெழுதியவர்களில் 1,563 தேர்வர்களுக்கு அந்தத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, குறிப்பிட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும். நேரக் குறைபாடால் பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23ம் தேதி (நாளை) மறுதேர்வு நடத்தப்படும். அந்த மறுதேர்வு முடிவுகள் 30ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று உத்தரவிட்டது.

இவ்வாறாக நீட் முறைகேடுகள் அடுத்தடுத்த மாநிலங்களில் நடந்துள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 8ம் தேதி நடத்தப்படுகிறது. நீட் தேர்வு விசயத்தில் ஒன்றிய அரசும், தேசிய தேர்வு முகமையும் பல லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்துள்ளன எனக்கூறி எதிர்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், மாணவர்களும், பெற்றோரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு விவகாரம் ஒருபக்கம் இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டின் பல்வேறு நகரங்களில் யுஜிசி ‘நெட்’ தேர்வு நடத்தப்பட்டது.

அந்தத் தேர்வின் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்து, தேர்வை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டது. சிபிஐ-யும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறது. நீட், நெட் தேர்வுகளில் நடக்கும் மோசடிகள், வரும் 24ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான சட்ட மசோதா கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மசோதா சட்டமானது. தற்போது அந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிக்கையை ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்றிரவு பிறப்பித்தது. அந்த அறிவிக்கையில், ‘ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே, தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்டவை நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க, அரசுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) மசோதா 2024 வழிவகுக்கிறது.

இந்த மசோதாவின்படி, அந்தத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும். பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம் – 2024 – ஒன்றிய ஆட்சேர்ப்பு மற்றும் ஒன்றிய கல்வி நிறுவனங்களில் நுழைவு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டம் ஜூன் 21ம் தேதி முதல் (நேற்று) அமலுக்கு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், தேர்வுகளில் முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சொத்துகள் பறிமுதல்
ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள் திருத்துதல், ஆவணங்களைத் திருத்துதல், தேர்வின் பாதுகாப்பு விதிகளை மீறுதல், ஒதுக்கீட்டில் முறைகேடு, தரவரிசைப் பட்டியலில் திருத்தம் செய்தல் ஆகியவை குற்றங்களாகும். குற்றமாக நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஒரு கோடி ரூபாய்க்கு குறையாமல் அபராதமும் விதிக்கப்படும். எந்தவொரு நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டாலும், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். ஒருவர் மட்டும் குற்றம் செய்தால், 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசு நடத்தும் தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் சிறை ரூ.1 கோடி அபராதம்: கடுமையான புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது; நீட், நெட் வினாத்தாள் கசிவுக்கு மத்தியில் திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: