அண்ணாசாலையில் காபரே டான்ஸ் நடத்திய ரெஸ்டாரன்டிற்கு சீல் வைக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள பால்ஸ் ரெஸ்டாரன்ட்டில் காபரே டான்ஸ் நடத்த 1980ம் ஆண்டு முதல் காவல்துறை உரிமம் வழங்கி வருகிறது. இந்நிலையில், 2020ம் ஆண்டிற்கு உரிமத்தை புதுப்பிக்க கோரி அளித்த விண்ணப்பத்தை சென்னை மாநகர காவல்துறை நிராகரித்தது. இதை எதிர்த்து ரெஸ்டாரன்ட்டின் உரிமையாளர் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காபரே நடனத்திற்கான உரிமத்தை புதுப்பிக்க உத்தரவிட வேண்டுமெனவும், புதுப்பிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார். அதேசமயம், உரிமத்தை புதுப்பிக்க கூடாது, ரெஸ்டாரன்ட்டை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பால்ஸ் ரெஸ்டாரன்ட்டுக்கு சீல் வைக்க வேண்டுமென கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உத்தரவிட்டார். ரெஸ்டாரன்டிற்காக வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள விடுதிகள், கிளப்களில், ஆபாச நடனங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்கிறதா என ஆய்வு செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ராமசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, பால்ஸ் ரெஸ்டாரன்ட்டுக்கு எதிராக பதிவான வழக்கின் அடிப்படையிலேயே உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டி, அந்த வழக்கே ரத்து செய்யப்பட்ட பிறகு உரிமம் வழங்க மறுக்க முடியாது என கூறி, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். உரிமம் வழங்க மறுத்த சென்னை மாநகர காவல் துறை உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், உரிமம் வழங்க கோரி ஒரு வாரத்தில் புதிதாக விண்ணப்பம் அளிக்கும்படி மனுதாரர் ராமசாமிக்கும், விண்ணப்பத்தை பெற்ற 2 வாரத்தில் அதை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

The post அண்ணாசாலையில் காபரே டான்ஸ் நடத்திய ரெஸ்டாரன்டிற்கு சீல் வைக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து appeared first on Dinakaran.

Related Stories: