ஒன்றிய அரசால் முடக்கப்பட்ட என்டிசி மில், ஸ்பைசஸ் பார்க் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?

* 4 ஆண்டுகளாக உற்பத்தியின்றி பெரும் பாதிப்பு

* வேலையிழந்த தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் செயல்படாமல் முடக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான டெக்ஸ்டைல் மில்கள் கோவை மாவட்டத்தில் 5, ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில் 1 மற்றும் காளையார்கோவிலில் 1 மில் என மொத்தம் 7 மில்கள் செயல்பட்டு வந்தது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமாக காளையார்கோவிலில் செயல்பட்டு வரும் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு (என்டிசி) சொந்தமான காளீஸ்வரா மில்லில் கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய ஒன்றிய அரசு கூடுதல் யூனிட்டுகள் உருவாக்கி, அதற்கு தேவையான இயந்திரங்கள் பொருத்தும் பணியை செய்து முடித்து அதில் உற்பத்தியும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் மில் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக மில்லை இயக்க எந்த நடவடிக்கையையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. இங்கு பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மில் செயல்படாமல் உள்ளதால் மில்லில் உள்ள இயந்திரங்கள் முழுமையாக பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வர்த்தகத் துறை சார்பில் இந்தியா முழுவதும் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் ஏற்கனவே ஸ்பைசஸ் பார்க் செயல்பட்டு வருகிறது. எட்டாவதாக சிவகங்கை அருகே கொட்டகுடியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஸ்பைசஸ் பார்க் கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் 40 பிளாட்டுகள் அமைக்கப்பட்டது. வாசனை பயிர்களான மிளகாய், மல்லி, மஞ்சள், இஞ்சி, பெருங்காயம் முதலியவற்றை மதிப்பு கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டது.

இங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் ஒன்றிய அரசின் 33 சதவீத மானியம் கிடைக்கும். பூங்கா முழுமையாக செயல்படும் நிலையில் ஏற்றுமதி வணிகம் மூலம் ரூ.1500 கோடி வருவாயும், சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு அப்போதைய ஒன்றிய அரசு அமைத்தது. 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் அதன் பிறகு வந்த ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் இத்திட்டமும் முடங்கும் நிலை உள்ளது.

நிலங்களை தனியாருக்கு வழங்கும் ஒன்றிய பாஜ அரசு

சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான மில்கள் அனைத்திற்கும் இதே நிலை தான். இந்த ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்துவதில்தான் குறியாக உள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசு நிறுவனங்களை முடக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது.

இதில் உள் நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை முடக்கி இந்த நிறுவனங்கள் உள்ள நிலங்களை தனியாருக்கு வழங்கும் வகையிலேயே ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களை நிறுத்திவிட்டு இந்த நிறுவனங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post ஒன்றிய அரசால் முடக்கப்பட்ட என்டிசி மில், ஸ்பைசஸ் பார்க் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா? appeared first on Dinakaran.

Related Stories: