நீலகிரி கோடை விழா கூடலூரில் 10வது வாசனை திரவிய கண்காட்சி துவங்கியது

கூடலூர்: கோடை விழாவையொட்டி கூடலூரில் 10வது வாசனை திரவிய கண்காட்சி இன்று துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 10வது வாசனை திரவிய கண்காட்சி கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் இன்று காலை துவங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

கண்காட்சியையொட்டி தோட்டக்கலை துறை சார்பில் 95 கிலோ வாசனை திரவியங்களால் ஆன வரவேற்பு வளைவு, ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண படத்தில் நடித்த முதுமலை புலிகள் காப்பக யானை பாகன் தம்பதிகள் பொம்மன், பெள்ளி, படத்தில் இடம்பெற்ற யானைகளன் உருவம் மற்றும் அதற்காக அளிக்கப்பட்ட ஆஸ்கர் விருது வடிவம்ஆகியவை 14 வகையான வாசனை திரவியங்களை கொண்டு தயாரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், 4 அடி உயர ஆஸ்கார் விருது கசகசா, ஜாதிபத்திரி, கருஞ்சீரகம், ஸ்டார் அனீஸ் ஆகிய வாசனை திரவியங்களாலும், யானைகள் சீரகத்தாலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொம்மன், பெள்ளி உருவங்கள் ஐந்தரை அடி உயரத்திலும், பெரிய யானை 7 அடி உயரம் 6 அடி நீளத்திலும், சிறிய யானை 6 அடி உயரம் 5 அடி நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடலூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன பிரமாண்ட மீன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கண்காட்சியில், தோட்டக்கலைத் துறை, உள்ளாட்சித் துறை, சுற்றுலாத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் குழந்தைகள் பெரியவர்களின் பொழுது போக்கிற்காக ராட்டினம், உள்ள உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

The post நீலகிரி கோடை விழா கூடலூரில் 10வது வாசனை திரவிய கண்காட்சி துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: