வரும் சனிக்கிழமை பொதுமக்கள் மெகா குறைதீர் முகாம்

சென்னை: சென்னையில் சனிக்கிழமை நடைபெற உள்ள பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார். இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: முதல்வர் காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாம்” நடத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 8ம் தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் வேப்பேரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற உள்ளார். இதேபோல, சென்னை காவல் எல்லையில் உள்ள பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, தி.நகர் மற்றும் புனித தோமையார் மலை ஆகிய 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் பொதுமக்கள் மெகா குறைதீர் முகாம் நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெறுகின்றனர். சென்னை காவல் எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வரும் சனிக்கிழமை பொதுமக்கள் மெகா குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: