நெல்லிக்குப்பம் அருகே பயங்கரம் வீட்டிற்குள் தாய், மகன், பேரனை அடித்து கொன்று தீவைத்து எரிப்பு: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை தீவிரம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே வீட்டிற்குள் பூட்டி வைத்து தாய், மகன், பேரனை கொன்று எரித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் சீத்தாராமன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கமலேஸ்வரி (62). இவர்களுக்கு சுரேந்திரகுமார் (43), சுகந்தகுமார் (40) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். சுரேஷ் தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு வருடத்துக்கு முன் இறந்து விட்டார். இளைய மகன் சுகந்தகுமார் இன்ஜினியரிங் படித்து விட்டு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்ததுடன் அங்கேயே மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவரது மகன் நிஷாந்த் குமார்(10).

நெல்லிக்குப்பத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். சுரேந்திரகுமார் குடும்பத்துடன் காக்கிநாடாவில் வசித்து வருகிறார். சுகந்தகுமார் மகனை பார்க்க ஐதராபாத்தில் இருந்து கடந்த வாரம் சுகந்தகுமார் நெல்லிக்குப்பம் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கமலேஸ்வரி வீட்டின் மாடிப்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. தகவலறிந்து நெல்லிக்குப்பம் போலீசார் சென்று வீட்டின் வெளியே உள்ள கிரில்கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்குள்ள ஹாலில் கமலேஸ்வரி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் தீ எரிந்து கொண்டிருந்தது.

ஒரு அறையில் சிறுவன் நிஷாந்த் குமாரும், படுக்கை அறையில் சுகந்தகுமாரும் உடல் கருகி இறந்து கிடந்தனர். அந்த அறைகள், உள் மற்றும் வெளி சுவர்களில் ரத்தம் சிதறி கிடந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூத்த மகன் சுரேந்திரகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் காக்கிநாடாவில் இருந்து திரும்பினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், 3 பேரையும் மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்துவிட்டு தீ வைத்து எரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது 2 தெருக்கள் வழியாக ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சம்பவம் நடந்த வீட்டை கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் நேரில் பார்வையிட்டு வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். சுகந்தகுமாரின் வீட்டு பகுதியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பைக்கில் வந்து சென்றதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து 4 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* 2வது மனைவியின் கணவர் மிரட்டல்
சுகந்தகுமாருக்கு 2008ல் திருமணம் ஆனது. 3 மாதத்தில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் சுகந்தகுமார் பெங்களூருவில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து வாடகை வீட்டில் வசித்துள்ளார். அப்போது பெங்களூருவை சேர்ந்த முஸ்லிம் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு வாழ்க்கை நடத்தியுள்ளார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் குழந்தையை ஒப்படைத்துவிட்டு 2வது மனைவி பிரிந்து சென்றுள்ளார். அந்த குழந்தையை சுகந்தகுமாரின் தாய் வளர்த்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் சுகந்தகுமார் 2வது மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார். இது தெரிந்து அவரது கணவர் பலமுறை மிரட்டியுள்ளார்.

* டீப்பாயில் கத்தி, மதுபாட்டில்
கமலேஸ்வரி கடந்த 12ம் தேதி பண்ருட்டியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இரவில் வீடு திரும்பி உள்ளார். அவரது மகனும், பேரனும் வீட்டிலேயே இருந்துள்ளனர். வெளிநபர்கள் யாரும் அவர்களை சந்திக்கவில்லை, கடந்த 2 நாட்களாக அவர்கள் வெளியே வரவில்லையாம். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கமலேஸ்வரிக்கு போன் செய்தபோது போனையும் எடுக்கவில்லையாம். டீப்பாயில் ஒரு கத்தியும், மதுபாட்டிலும் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post நெல்லிக்குப்பம் அருகே பயங்கரம் வீட்டிற்குள் தாய், மகன், பேரனை அடித்து கொன்று தீவைத்து எரிப்பு: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: