இளம்பெண்ணை காரில் கடத்தி தாலி கட்டிய காதலனுக்கு தர்மஅடி

சத்தியமங்கலம்: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூர் மட்டத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மகள் மகேஸ்வரி (20). இவர், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை காதலித்து வந்ததாகவும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இருவரது பெற்றோர்களை போலீசார் அழைத்து பேசிய நிலையில் மகேஸ்வரி மீண்டும் மனது மாறி தனது பெற்றோருடன் செல்ல சம்மதித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் தாளவாடியில் உள்ள உறவினர் வீட்டில் மகேஸ்வரியை தங்க வைத்தனர்.

இந்நிலையில், தாளவாடியில் இருந்த மகேஸ்வரியை அவரது தந்தை ஊருக்கு அழைத்து செல்வதாக நேற்று காலை பண்ணாரி அம்மன் கோயில் பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென வந்து நின்ற காரில் இருந்த 2 பேர் மகேஸ்வரியை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரை துரத்திச் சென்று, புது குய்யனூர் அருகே காரை தடுத்து நிறுத்திய போது காரை ஒட்டிச்சென்ற நபர் மரத்தில் மோதி நிறுத்தினார்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் இளம்பெண்ணை கடத்திச்சென்ற இருவரை தாக்கி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், மகேஸ்வரி தாளவாடியில் இருந்து ஊருக்கு செல்லும் தகவலை தனது காதலன் மணிகண்டனுக்கு செல்போன் மூலம் தெரிவித்ததும், பண்ணாரி அருகே தந்தையுடன் நின்றிருந்த மகேஸ்வரியை மணிகண்டன் காரில் கடத்தி, அவருக்கு காரிலேயே தாலி கட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து தனது காதலனுடன் செல்ல மகேஸ்வரி விருப்பம் தெரிவித்த நிலையில் இருவரையும் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: