விபத்தில் பலியான முதல் கணவருக்காக கிடைத்த ரூ.11 லட்சத்தை கேட்டு கொடூரம் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்த 2வது கணவர்

* மூதாட்டி பலி; மனைவி, மகன்கள் கவலைக்கிடம், சிவகாசியில் பயங்கரம்

சிவகாசி: சிவகாசியில் இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி, 2 பிள்ளைகள், மூதாட்டியை இரண்டாவது கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மூதாட்டி உயிரிழந்தார். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள முஸ்லிம் ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் முபாரக் அலி. இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (42). மகள் பர்வின் (16). மகன் செய்யது பாரூக் (13). 10 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் முபாரக் அலி உயிரிழந்தார்.

செய்யது அலி பாத்திமா தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியார் சிக்கந்தர் பீவி (65) ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே, நான்கு ஆண்டுகளுக்கு முன், செய்யது அலி பாத்திமா அதே பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர், பட்டாசு ஆலையில் வேன் டிரைவராக உள்ளார். அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், செய்யது அலி பாத்திமாவின் முதல் கணவர் சாலை விபத்தில் இறந்த காப்பீட்டுத்தொகை ரூ.11 லட்சம் கிடைத்துள்ளது. அதை மனைவியிடம் அடிக்கடி கேட்டு அக்பர் அலி தகராறு செய்துள்ளார். அவர் தர மறுக்கவே, மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செய்யது அலி பாத்திமா, சிவகாசி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார், அக்பர் அலியை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்த அவர், கடந்த 4 மாதமாக உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

பணம் தராத பிரச்னையில், மனைவி மற்றும் அவரது குடும்பத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று அதிகாலை செய்யது அலி பாத்திமா வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் அக்பர் அலி சென்றார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த செய்யது அலி பாத்திமா, மகன், மகள் மற்றும் சிக்கந்தர் பீவி ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி கொடூரமாக தீயை வைத்தார். தீப்பற்றியவுடன் அனைவரும் அலறித் துடித்தனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தீ வைத்ததில் அக்பர் அலிக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகில் உள்ள சிவகாசி டவுன் காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்து தகவலை தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார், தீயணைப்புத்துறையினருடன் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீக்காயத்துடன் போராடிய செய்யது அலி பாத்திமா, செய்யது பாரூக், பர்வீன், சிக்கந்தர் பீவி ஆகியோரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிக்கந்தர் பீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பர்வீன் 35 சதவீத தீக்காயங்களுடன் உள்ளார். செய்யது அலி பாத்திமா, செய்யது பாரூக் மற்றும் அக்பர் அலி, 90 சதவீதத்திற்கு அதிகமான தீக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* போலீஸ் ஸ்டேஷனுக்கு உடலில் தீயுடன் ஓட்டம்
அக்பர் அலி தனது மனைவி உள்ளிட்டோர் மீது தீ வைத்தபோது, அவர் மீதும் பெட்ரோல் பட்டு தீப்பற்றியது. இதனால் பதறிப்போன அக்பர் அலி, தீப்பற்றி எரிந்த ஆடைகளை களைந்து எறிந்தவாறு, 100 மீட்டர் தொலைவில் உள்ள சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். ஆடையின்றி உடலில் தீக்காயங்களுடன் வந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

* திருவள்ளூரை தொடர்ந்து…
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆய்வக உதவியாளராக பணியாற்றிய தந்தை கணேசனை (56), ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொன்றதாக அவரது மகன்கள் மோகன்ராஜ், அரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து இப்போது இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி, 2 பிள்ளைகள், மாமியார் ஆகியோரை 2வது கணவர் தீவைத்து எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: