திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி தர்ணா பாஜ தேசிய நிர்வாகி உட்பட 11 பேர் கைது

திருப்பரங்குன்றம்: பாஜ சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு வழிபட செல்வதற்காக வந்திருந்தார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி என கூறிய நிலையில் இரவு முழுவதுமே மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயில் முன் நிர்வாகிகளுடன் அமர்ந்து வேலூர் இப்ராகிம் தர்ணாவில் ஈடுபட்டார். இதற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேலூர் இப்ராகிம் மற்றும் பாஜ நிர்வாகிகள் மலையடிவாரத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வரும்போது போலீசார், வேலூர் இப்ராகிம், மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உள்பட 11 பேரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்று, அதிகாலை 4 மணிக்கு விடுவித்தனர். அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: