புதுச்சேரி போலி மருந்து விவகாரம் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கைது: முக்கிய குற்றவாளியின் மனைவி, 20 பார்சமிஸ்ட்டுகளை கைது செய்ய தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் ராஜா, விவேக் உட்பட மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை புதுச்சேரி சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு கவர்னர் பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் என்.ஆர்.மணிகண்டன், பூத்துறை ஆனந்தராஜ், கோட்டக்குப்பத்தை சேர்ந்த குமரவேலு, முருங்கப்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், ராஜா நடத்தி வந்த போலி மருந்து தொழிற்சாலையின் பங்குதாரராக செயல்பட்டு வந்துள்ளார்.

செல்வராஜ் கணக்காளராகவும், ஆனந்தராஜ், குமரவேலு ஆகியோர் போலி மருந்துகளுக்கு லேபிள் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜாவின் 7 நாள் போலீஸ் காவல் இன்று மாலையுடன் முடிகிறது. அவரது தகவலின் பேரில் ராஜா நடத்தி வந்த கம்பெனியின் எம்டியும் அவரது மனைவியுமான ஞானபிரியா, பெங்களூருவில் பதுங்கி உள்ளார். மேலும் மருந்து, மாத்திரைகளை தயாரிக்கும் கை தேர்ந்த 20 பார்மசிஸ்ட்டுகள் பணியில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓசூரை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. எனவே அவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அங்கு முகாமிட்டு தேடி வருகின்றனர். இவர்கள் பிடிபட்டால் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories: