கிறிஸ்துமஸ் விழாவில் குமரியில் அட்டகாசம் வாலிபர்கள் பைக் ரேஸ்: துரத்தி துரத்தி அடித்த மக்கள்: போலீஸ்காரர் காயம்

கருங்கல்: குமரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கருங்கல் ஆலஞ்சி பகுதியில் 25க்கும் மேற்பட்ட பைக்குகளில் வாலிபர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென பைக் ரேஸில் ஈடுபட்டதுடன் சாலையை மறித்து நடுரோட்டில் வீலிங் செய்து அதிக சத்தத்தை எழுப்பினர். இதனால் சிரமத்திற்கு உள்ளாகிய அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் ஏன்? இவ்வாறு சத்தம் எழுப்பி ரேஸில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதை கண்டுகொள்ளாத அந்த வாலிபர்கள் மீண்டும் வீலிங் செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ரேஸிங்கில் ஈடுபட்ட வாலிபர்களை கிராம மக்கள் கம்பால் துரத்தி அடித்தனர். இதனால் சில வாலிபர்கள் அடி வாங்கிக்கொண்டு பைக்கில் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அதிரடி படையினர் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அப்போது வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த பைக் அதிரடிப்படையை சேர்ந்த காவலர் அருள்ராஜ் (36) மீது மோதியது. படுகாயமடைந்த அருள்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

* கடலில் கொண்டாடிய வாலிபர் பலி
குமரி மாவட்டம் குலசேகரம் இட்டகவேலி பொன்னாவரவிளை பகுதியை சேர்ந்தவர் ரெஜின் ஜாஸ்பின் (34). வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊருக்கு வந்திருந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக மனைவி கிறிஸ்டல் நிஜி மோள் (32), 2 பிள்ளைகள் மற்றும் மனைவியின் தங்கை கிறிஸ்டல் விஜிமோள், அவரது 2 பிள்ளைகள், மாமனார் டைசன் (67), மாமியார் அமலா (56) ஆகிய 9 பேராக நேற்று குளச்சல் சென்றனர் கடலில் கொண்டாட 5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மிடாலம் பகுதியில் கரை இறங்கும்போது ரெஜின்ஜாஸ்பின் படகிலிருந்து நிலை தடுமாறி கடலில் விழுந்து பலியானார்.

Related Stories: