சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி முஸ்லீம் ஓடைத்தெருவை சேர்ந்தவர் முபாரக் அலி மனைவி செய்யது அலி பாத்திமா (42). இவருக்கு 16 வயதில் மகள், 13 வயதில் மகன் உள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் முபாரக் அலி உயிரிழந்தார். செய்யது அலி பாத்திமா தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியார் சிக்கந்தர் பீவி (65) ஆகியோருடன் வசித்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், செய்யது அலி பாத்திமா அதே பகுதியைச் சேர்ந்த பட்டாசு ஆலை வேன் டிரைவர் அக்பர் அலி (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
செய்யது அலி பாத்திமாவின் முதல் கணவர் சாலை விபத்தில் இறந்த காப்பீட்டுத்தொகை ரூ.11 லட்சம் கிடைத்துள்ளது. இதை கேட்டு, நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செய்யது அலி பாத்திமா, அவரது மகன், மகள் மற்றும் சிக்கந்தர் பீவி ஆகியோர் மீது அக்பர் அலி பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அப்போது அக்பர் அலி மீதும் தீப்பிடித்தது. இதில், செய்யது அலி பாத்திமா, சிக்கந்தர் பீவி உயிரிழந்தனர். அக்பர் அலி மற்றும் 13 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 16 வயது சிறுமி மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
