மோடி அரசின் கடைசி கூட்டத் தொடர்; நாளை இடைக்கால பட்ஜெட் சலுகை அறிவிப்புகள் இருக்குமா?

புதுடெல்லி: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். புதிய சலுகை அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஐந்தாண்டின் கடைசி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கொள்கை அறிவிப்பு உரையுடன் தொடங்கியது. லோக்சபா தேர்தல் வரவுள்ளதால் இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.

இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால், பொருளாதார ஆய்வு அறிக்கை வாசிக்கப்படவில்லை. அடுத்த மாதம் 9ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் (10 நாட்கள்) நடைபெறும் என்பதால், லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டில் சலுகை அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், நெல் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் (மூன்று தவணைகளில்) முதலீட்டு உதவியை வழங்குகிறது.

அந்த தொகை ரூ.9 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உர மானியம் மற்றும் பயிர் காப்பீடு விவகாரத்தில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகும். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காசா நெருக்கடி காரணமாக, கச்சா எண்ணெய் சர்வதேச அளவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி நம்பிக்கையுடன் உள்ளது. 2023-24 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7-7.3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. 2047ல் வளர்ந்த நாடாகவும், 2025ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக வளரவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வேயில் மூலதனச் செலவு குறையாமல் இருக்க, அந்தத் துறைக்கு ரூ.2.8 – 3 லட்சம் கோடி வரை ஒதுக்கலாம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஃபிண்டெக், மின்சார வாகனங்கள், சுகாதார சேவைகள்-காப்பீடு, உயிரித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற துறைகளுக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்படலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் மூலதனச் செலவு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சி வேகம் பெற்றுள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9% ஆக உள்ளது. 2025-26க்குள் அதை 4.5% ஆகக் குறைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

The post மோடி அரசின் கடைசி கூட்டத் தொடர்; நாளை இடைக்கால பட்ஜெட் சலுகை அறிவிப்புகள் இருக்குமா? appeared first on Dinakaran.

Related Stories: