ஈஷா மையத்துக்கு சென்ற பல பெண்கள் மாயம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் தகவல்

புதுடெல்லி: கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர், கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது மகள்கள் 2 பேரை மீட்டு தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மையம் மீது எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள், காவல் துறையினர், கோவை ஈஷா யோக மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 3ம் தேதி விசாரணை நடத்தியது. அப்போது, ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், அந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக போலீசார் சார்பில் வக்கீல் குமணன் தாக்கல் செய்த பதில் மனு: ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்களில் சிலருக்கு மனரீதியான அழுத்தம் உள்ளது. அதற்கான கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர். ஈஷா மையத்தில் உள்ள மருத்துவ மையம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. ஆனால் எக்ஸ்ரே மையத்துக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அந்த மையத்தில் தகுதியில்லாத நபர் பணியில் உள்ளார். அங்கு, பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு முறையாக செயல்படவில்லை. அதேபோன்று உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த காமராஜ் என்பவரின் மகள்களான மதி, மாயூ ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2024ல் மட்டும் 70 முறை செல்போனில் பெற்றோரிடம் பேசியதாகவும், 3 முறை நேரில் சந்தித்ததாகவும் தாங்கள் ஈஷா மையத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் ஈஷா மையத்தில் உள்ள பிரம்மச்சாரிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சுதந்திரமாக வெளியே செல்ல எந்த தடையும் இல்லை என தெரிவித்திருந்தனர். அதற்கு ஈஷா மையம் எப்போதும் தடை விதித்ததில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஈஷா மையத்திற்குச் சென்ற பெண்கள் உட்பட பலரை காணவில்லை. அவர்களை போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை செயல்படுகிறது. அங்குள்ள மருத்துவமனையில் காலாவதியான மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு காவல்துறை மீது உச்ச நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஈஷா மையத்துக்கு சென்ற பல பெண்கள் மாயம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: