அரசு பள்ளிகளில் ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆங்கில பேச்சு திறனை வளர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை

சென்னை: மாணவர்கள் தங்களது ஆங்கில பேச்சு திறனை வளர்க்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். சென்னை அடுத்த திருப்போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திருப்போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த ஆய்வுக்கூடம், கணினி அறை, வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அமைச்சரை கண்டதும், அங்கிருந்த மாணவிகள் எழுந்த கணினிக்கு இணையதள வசதி செய்து தரப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து கல்வித்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர், பள்ளியில் இணைய வசதியில் ஏற்பட்டுள்ள பிரச்னையை உடனே சீர்செய்து தர உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து வகுப்பறைகளுக்கு சென்ற அமைச்சர் மாணவிகளை படிக்கச்சொல்லி அவற்றில் சில கேள்விகளை எழுப்பினார். மேலும், மகளிர் பள்ளியில் இருந்து மாநில அளவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுபெற்ற மாணவியை அழைத்து பாராட்டினார். தங்களுக்கு கூடுதல் இடவசதி வேண்டுமென பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுத்ததை ஏற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றார். அங்கு ஆய்வுக்கூடம், வகுப்பறைகள், கணினி அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களிடையே அமைச்சர் பேசியதாவது: ஆசிரியர் பாடம் நடத்தும் முறை பிடித்திருக்கிறதா, புரிகிறதா. கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post அரசு பள்ளிகளில் ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆங்கில பேச்சு திறனை வளர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: