மார்த்தாண்டத்தில் வீட்டு சிறையில் இருந்து தப்பி நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து காதலனை கரம்பிடித்த மாணவி : மாலையும் கழுத்துமாக போலீசில் தஞ்சம்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட கல்லூரி மாணவி நள்ளிரவு சுவர் ஏறி குதித்து பள்ளி பருவ காதலனை கரம்பிடித்தார். பின்னர் மாலையும் கழுத்துமாக போலீசில் தஞ்சம் அடைந்தார். மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (24). சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா (21). பள்ளியில் படிக்கும்போதே 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். பள்ளிப்படிப்பு முடிந்ததும் அனீஷ் வேலைக்காக வெளிநாட்டு சென்றுவிட்டார். ராதிகா கருங்கல் அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேரில் சந்திக்கவில்லை என்றாலும் 2 பேரும் செல்போன் மூலம் மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்து உள்ளனர்.

ஒருகட்டத்தில் காதல் விவகாரம் ராதிகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. 2 பேரும் வெவ்வேறு சாதி என்பதால் ராதிகாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரிக்கு அனுப்புவதையும் நிறுத்திவிட்டு வீட்டிலேயே சிறை வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவசர அவசரமாக ராதிகாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதனால் பயந்துபோன ராதிகா காதலனை தொடர்புகொண்டார். உடனே ஊருக்கு வரும்படியும், திருமணம் செய்துகொள்ளும்படியும் கூறினார்.

இதையடுத்து அனீஷ் கடந்த 4 நாளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன் பிறகு வீட்டில் இருந்து எப்படி தப்பிப்பது என்று 2 பேரும் செல்போனில் பேசி திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் பெற்றோர் தூங்கியதும் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் பாத்ரூமுக்கு செல்வதுபோல் பாவனை காட்டிவிட்டு, வீட்டுக்கு வெளியே வந்துள்ளார் ராதிகா. பின்னர் மதில்மேல் பூனை போல் காம்பவுண்டு சுவர் மீது ஏறி குதித்தார். இதையடுத்து ஏற்கனவே அங்கு பைக்கில் தயாராக நின்று கொண்டிருந்த காதலனுடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.

விடியும் வரை காத்திருந்த காதல் ஜோடி, தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு கடவிளாகம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றனர். அங்கே சாமியை சாட்சியாக வைத்து ராதிகாவின் கழுத்தில் அனீஷ் தாலி கட்டினார். இதற்கிடையே ராதிகாவின் பெற்றோர் மகளை காணாததால் யாருடன் சென்று இருப்பார் என்பதை கணித்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் காதல் ஜோடியை தொடர்புகொண்டு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். மாலையும் கழுத்துமாக வந்திருந்த ராதிகாவை கண்டதும், அவரது தாயார் கதறினார். ஆனால் காதலனை கரம்பிடித்த மகிழ்ச்சியில் இருந்த ராதிகா, அனீஷின் கையை கூட விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு நின்றார்.

2 பேரும் மேஜர் என்பதால் போலீசார் அவர்களுக்கு புத்திமதிகூறி வாழ்க்கையை நன்றாக தொடங்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். காதல் கடலில் விழுந்த ராதிகாவுக்கு தனது தாயின் கண்ணீர் துளிகள் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.

The post மார்த்தாண்டத்தில் வீட்டு சிறையில் இருந்து தப்பி நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து காதலனை கரம்பிடித்த மாணவி : மாலையும் கழுத்துமாக போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: