மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6200கி.மீ. ராகுல்காந்தி ‘பாரத் நியாய யாத்திரை’: ஜன.14ல் துவக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி இந்திய ஒற்றுமை (பாரத் ஜோடோ) யாத்திரையை தொடங்கினார். 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் என சுமார் 5 மாதங்கள் ராகுல் இந்த நடைபயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல்காந்தி வருகிற 14ம் தேதி மீண்டும் ஒரு யாத்திரையை தொடங்குகிறார். ‘பாரத் நியாய யாத்திரை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையானது 14 மாநிலங்கள் மற்றும் 85 மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகர், ஜார்கண்ட், ஒடிசா, சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக சுமார் 6200கி.மீ. தூரத்துக்கு ராகுல் யாத்திரையை தொடர்கிறார். பெண்கள், இளைஞர்கள் மற்றும் பின்தங்கிய சமூக மக்களிடையே ராகுல் கலந்துரையாடுகின்றார். இந்த யாத்திரையானது பெரும்பாலும் பேருந்து பயணமாக இருக்கும், குறுகிய தூரம் மட்டுமே நடைபயணம் மேற்கொள்ளப்படும். நாட்டு மக்களுக்கு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதியை பாதுகாக்கும் நோக்கில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது. 67 நாட்கள் தொடரும் இந்த யாத்திரை மார்ச் 20ம் தேதி நிறைவடைகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வருகிற 14ம் தேதி கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

The post மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6200கி.மீ. ராகுல்காந்தி ‘பாரத் நியாய யாத்திரை’: ஜன.14ல் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: