தெளிவு பெறுஓம்

தேங்காய் உடைக்கும் பொழுது
அழுகிவிட்டால் என்ன செய்வது?

– சதாசிவம், தேனி.

பதில்: இயன்றவரை நல்ல தேங்காயாகப் பார்த்து உடைப்பது நல்லது. சில நேரம் தேங்காய் அழுகிவிடும். சிலர் இது அபசகுனம் என்கிறார்கள். மறுபடியும் ஒரு நல்ல தேங்காயை உடைத்துவிடலாம். தவறில்லை. சில இங்கிதம் தெரிந்த அர்ச்சகர்கள் தேங்காயை மறைவில் உடைத்து, கெட்டுப் போயிருந்தால், அப்படியே போட்டுவிட்டு நல்ல தேங்காய் மூடியை பிரசாதமாகத் தருவார்கள். பகவானை பக்தியோடு தியானித்துவிட்டால், ஒரு குறையும் வராது.

? மகரிஷிகளில் பெண்கள் உண்டா?

– விசாலாட்சி, திருமங்கலம்.

பதில்: ஏன் இல்லை? சில பெண் மகரிஷிகளைப் பற்றிய குறிப்புக்கள் பண்டைய நூல்களில் காணப்படுகின்றன. இவர்களைப் பற்றிய குறிப்புகள், ஆண் மகரிஷிகளின் வாழ்க்கை வரலாறுகளில் வருகிறது. கோஷை, கோதை, விசுவவரஸ், அபாலை, உபநிஷதை, மைத்ரேயி, நிசதை, பிரமாஜயை, அதிதி, இந்திராணி, சராமை, ரோமஸை, ஊர்வசி, லோபமுத்திரை, யமி, , இலக்க்ஷை, ரஜினி, வாக்தேவி, சிரத்தா, மேதை, தட்சினை, இராத்திரி மற்றும் சூரிய சவிதா, கார்கி என பல பெண் ரிஷிகள் உண்டு.
இவர்கள் எழுதிய சூக்த மந்திரங்களும் வேதத்தில் இருக்கின்றன. உதாரணமாக, ரிக்வேதத்தில் காணப்படும் பெண் முனிவர் லோபமுத்திரை (அகத்தியரின் மனைவி) மற்றொருவர் அபாலா ஆவார். இவர், ரிக்வேதத்தில் ஒரு சூக்தம் மட்டுமே படைத்துள்ளார். அபாலாவின் வேண்டுதலுக்கு இரங்கி தேவர்கள் அவரது தோல் நோயை அகற்றி ஒளிரச் செய்தனர்.

? அனுமனை சிறிய திருவடி என்று
அழைக்கிறார்களே, சரியா?

– வீரதுறை, தேவதானம்.

பதில்: கருடனை பெரிய திருவடி என்பதால், அனுமனை சிறிய திருவடி என்று சிலர் அழைக்கின்றனர். ஆனால், வைணவ மரபில் அனுமனை சிறிய திருவடி என்று அழைக்கும் வழக்கம் இல்லை. திருவடி என்றால் அனுமனையும், பெரிய திருவடி என்றால் கருடனையும் குறிக்கும் வழக்கம் உண்டு. கம்பர் அனுமனை குறிக்கின்ற பொழுது திருவடி என்றுதான்
குறிக்கின்றார்.

``பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்த்த தாள்போல்
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன்; உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான்’’.

இதில், அனுமனை திருவடி என்றே கம்பர் குறிப்பிடுகின்றார். வைணவ உரையாசிரியர்கள் எங்கும் அனுமனை சிறிய திருவடி என்று அழைப்பதாகத்
தெரியவில்லை. திருவடி என்றே அழைக்கிறார்கள். பெருமாளுக்கு வாகனமாய் இருப்பதோடு, அவருடைய திருவடிகளையும் கைகளில் தாங்குகையால் கருடன், அனுமன் இருவருக்கும் திருவடி என்றழைப்பதே மரபு.

? ஆண்டாளை அஞ்சு குடிக்கு ஒரு பெண் பிள்ளை என்று சொல்கிறார்களே. அஞ்சு குடி என்று ஒரு குடி இருக்கிறதா?

– கு.வாஞ்சிநாதன், பெரியகுளம்.

பதில்: அஞ்சு குடி என்றால் ஆழ்வார் களைக் குறிக்கும். குறிப்பாக பெரியாழ்வாரைக் குறிப்பிடுவார்கள். அஞ்சு குடி என்பது “அஞ்சுகின்ற குடி’’ என்று பொருள். எதற்கு அஞ்சுகின்ற குடி என்றால், பகவானுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று அஞ்சி அவனுக்குப் பல்லாண்டு பாடுகின்ற ஆழ்வார்கள் குடிக்கு. “அஞ்சு குடி” என்று பெயர்.

அப்படி ஆழ்வார்கள் அஞ்சுவது அஞ்ஞானத்தால் அன்று. பிரேமத்தால். ஞானம் கனிந்த பக்தி நிலையால். அஸ்தான பயசங்கை என்பார்கள். அதாவது பயம் இருக்கக் கூடாது இடத்தில் பயம் இருப்பது என்று பொருள். பகவான் கண்ணனாக அவதாரம் எடுத்தது தெரிந்தும், கம்சனால் என்ன ஆபத்து வருமோ என்று அஞ்சிய ஆயர்கள் மனநிலைக்கு அஞ்சு குடி என்று பெயர். இப்படி அஞ்சிய ஆழ்வார்கள் அத்தனை பேருக்கும் ஒரு வாரிசாக ஆண்டாள் திகழ்வதால் “அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி” என்று ஆண்டாளைச் சொல்வது வழக்கம்.

? குழந்தைக்கு எதைச் சொல்லித் தரவேண்டும்?

– மணிமேகலை வேல்ராஜ்,
சிங்கப் பெருமாள் கோயில்.

பதில்: நேர்மையுடன் வாழும் திறமையைச் சொல்லித் தரவேண்டும் காரணம், நேர்மையுடன் வாழ்வதற்குதான் போராட்ட குணமும் திறமையும் தேவைப்படுகிறது. அதை வளர்த்துக் கொள்வதற்கே படிப்பு பயன்பட வேண்டும். இன்றைய போட்டி உலகமும், வணிக உலகமும் இத்தகைய நேர்மையை பூரணமாகச் சொல்லித் தரும் சூழலில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

? கல்யாண பத்திரிகையில் சிரஞ்சீவி என்று போடுகிறார்களே, சரியா? என்ன பொருள்?

– சாய்நாத், ஆமூர்.

பதில்: சிரஞ்ஜீவி என்றால் “என்றும் ஜீவித்து இருப்பவர்” என்று பொருள். அதனால் சிரஞ்ஜீவி என்றுதான் எழுத வேண்டும். சிரஞ்சீவி என்று சொன்னால் தலையை துண்டித்தல் என்கிற பொருளும் வரும். எனவே எழுதுகின்ற பொழுது சிரஞ்ஜீவி என்று எழுதுவது சாலச் சிறந்தது.

? ஸ்ரீ ரங்கம் சேத்திரம் சகல கிரக தோஷத்தையும் போக்கும் என்றார் ஒரு உபன்யாசகர். உண்மையா?

– பாரதி கண்ணன், கரூர்.

பதில்: நம்பிக்கையோடு போனால் எல்லாத் திருக்கோயில்களும் சகல தோஷங்களையும் போக்கும். அதிலும் ரங்கம் கட்டாயம் போக்கும். காரணம், அந்த கோயிலில் ஒவ்வொரு வாசலுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அதில் ராஜா மகேந்திரன் திருச்சுற்றில் தெற்கு வாயிலில் உள்ள துவாரத்திற்கு “நாழி கேட்டான் வாசல்” என்று பெயர். இந்த வாசலிலும் ஆரியப்படாள் வாசலிலும் படிகளில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அரங்கனை நினைத்து பக்தியோடு பிரவேசிக்கும் போதே சகல தோஷங்களும் ஓடிவிடும். இதில் சந்தேகம் இல்லை.

? ஹோமங்களில் காசு போடலாமா?

– அனுசந்திரசேகரன், வாணியம்பாடி.

பதில்: இந்த கேள்வியை பலரும் கேட்கிறார்கள். காரணம், பல இடங்களில் ஹோமங்கள் செய்யும் பொழுது அங்கு குழுமி இருக்கிற மக்களிடம் சில்லறை காசுகளை போடச் செய்து அதை பூர்ணாஹுதியோடு சேர்த்து அக்னியில் போடுகின்றார்கள். கடைசியில் அது கருப்பாகி, அந்த காசை பலரும் வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்துக் கொள்கின்றார்கள், இல்லாவிட்டால் பணம் வைக்கும் பீரோவில் வைத்துக் கொள்ளுகிறார்கள். அடியேன், பல அறிஞர் பெருமக்களிடம் விசாரித்தவரை இந்த விஷயத்தை ஆதரிக்கவில்லை. இப்படிப்பட்ட பழக்கம் இப்பொழுதுதான் வந்திருக்கிறது. பூர்ணாஹுதியில் என்னென்ன திரவியங்களைப் போடலாம் என்று அந்தந்த ஹோம வழிமுறைகளில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அதுவும் எந்தெந்த தேவதைகளைக் குறித்து ஹோமம் இயற்றப் படுகின்றதோ அதற்கு தகுந்தால் போல, ஹோம திரவியங்களை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அதிலே பொன் (ஸ்வர்ணம்), பட்டு, வெள்ளி முதலியவற்றை சேர்க்கின்ற வழக்கம் உண்டு என்று சொல்கிறார்கள். காசு போடும் வழக்கம் இல்லை. இப்பொழுது உள்ள காசுகள் பொன் மற்றும் வெள்ளியினால் ஆனவை அல்ல. இவைகள் எல்லாம் இரும்பு சம்பந்தப்பட்டவை. எக்காரணத்தை முன்னிட்டும் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அக்னியில் போடுவது முறை அல்ல. அந்த அடிப்படையில் இந்த பழக்கம் தேவையில்லாத பழக்கம் என்று ஆகம விதிகளை அறிந்த பெரியோர்கள் சொல்கின்றார்கள்.

நாம் பூர்ணாஹுதி செய்யும் பொழுது மனதார இறைவனின் திருநாமத்தை மனதில் எண்ணி, வாயால் உச்சரித்து வணங்கினால் போதும். ஹோமத்தின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஹோம காசை வாங்கி கொண்டு போய் வீட்டில் வைத்ததால் மட்டுமே நமக்கு ஐஸ்வர்யங்கள் கிடைத்துவிடாது.

? மகாவிஷ்ணு ராமராக அவதாரம் எடுத்தார். கிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். பல ஆண்டுகள் இந்த நிலவுலகத்தில் வாழ்ந்தார் என்று வருகின்றதே, அப்படியானால் மகாவிஷ்ணுவினுடைய உலகமான வைகுந்தம் மற்றும் பாற்கடலில் அவர் இருக்க மாட்டாரா?

– கணபதி, தாம்பரம்.

பதில்: பகவான் அண்டாதி அண்டங்களைப் படைத்தவன். அதைத் தனது சரீரமாகக் கொண்டவன். அதனால்தான் அவருக்கு நாராயணன் என்று பெயர். (நார+அயனம்). அதாவது உயிர் தொகுதிகளை தனது உடலாகக் கொண்டு அவை இயங்குவதற்கு உயிராக இருப்பவன் என்று சொல்லுவார்கள். தர்மம் செழிக்கவும் அப்பொழுது அதர்மத்தை அழிக்கவும் அவதாரங்களை எடுக்கின்றான். பகவத் கீதையில் இரண்டு ஸ்லோகங்களால் இது தெளிவாகிறது.

‘‘யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் – பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்’’

(அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.)

‘‘பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம – ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!’’

(நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.)

அந்த அவதாரங்களை அம்ஸ அவதாரம், ஆவேச அவதாரம், பூர்ண அவதாரம் என்று பிரிப்பார்கள். ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பூர்ண அவதாரங்கள். ஆனால், இவர்கள் மூல பரம்பொருளின் அம்சங்களே தவிர, மூலப் பரம்பொருளே, முழுமையாக இங்கே அவதார புருஷனாக இருப்பது கிடையாது. ஆனால், அவதார புருஷர்களுக்கு, மூல பரம்பொருளின் அத்தனை கல்யாண குணங்களும் இருக்கும். இது எப்படி என்றால், பூரணத்திலிருந்து பூர்ணம் கிடைப்பது போல, வெல்லத்தில் இருந்து கொஞ்சம் கிள்ளி வெளியே எடுத்தாலும் அந்த வெல்லம் சுவையிலும் குணத்திலும் மாறாது அல்லவா. அதைப் போலவே மகாவிஷ்ணுவினுடைய அத்தனை அம்சங்களும் ராமனிடத்திலும் கிருஷ்ணனிடத்திலும் இருந்தாலும்கூட மகாவிஷ்ணு வினுடைய அம்சங்கள்தான் அவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

அதனால்தான் அவர்கள் அவதார காலத்தை முடித்துக் கொண்டு தன் அடி சோதிக்குத் திரும்பும் பொழுது. மூலப்பொருளான மகாவிஷ்ணுவோடு அவர்கள் ஐக்கியமாகி விடுகின்றார்கள். எனவே ராமரும், கிருஷ்ணரும் அவதார காலத்தில் இருக்கும் பொழுது மகாவிஷ்ணுவும் வைகுந்தத்திலும் பாற்கடலிலும் இருப்பார்கள் என்று தெளிவாகிறது.

? வித்தியாசமான முருகன் கோயில்
ஏதாவது இருக்கிறதா?

– ராஜாராமன், திருப்பூர்.
பதில்: உண்டு. ஒரு சில சொல்லுகின்றேன்.

1. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

2. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

3. முருகனுக்கு உருவமில்லாத கோயில் விருத்தாசலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.

? அபரான்னகாலம் என்கிறார்களே? அந்த நேரம் எதற்கு பார்க்கிறார்கள்?

– புஷ்பலதா, விருகம்பாக்கம்.

பதில்: பகல் பொழுதை ஐந்து பாகமாக பிரித்து அதில் நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும் பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் ‘‘அபரான்னகாலம்’’ என அழைக்கப்படும், பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்யவேண்டும். இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள், பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள். நாம் அளிக்கும் எள், தண்ணீரை உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

? கர்மவினை என்றால் போன ஜன்மத்தில் செய்த செயல்களின் விளைவா?

– புஜங்கராவ், மார்க்கையங்கோட்டை.

பதில்: இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். இந்த ஜன்மத்தில் செய்த செயல்களுக்கு இந்த ஜன்மத்திலேயேகூட எதிர்விளைவு நேரலாம். “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதுதான் கர்மவினை. முற்பகல் என்பது போன ஜன்மமாகவும் இருக்கலாம். இந்த ஜன்மத்தில் நம் ஆயுளின் முற்பகுதியாகவும் இருக்கலாம்.

? பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தம் தருகிறார்களே, என்ன காரணம்?

– முத்துகிருஷ்ணன், ராயபுரம்.

பதில்: துளசியின் மகிமைதான் காரணம். பகவான் அதிகம் விரும்பும் ஒரு பொருள் துளசிதான். ‘‘நாற்றத்துழாய் முடி நாரயணன்” என்றே ஆண்டாள் பாடுகிறாள். துளசி இருக்கும் இடத்தில் பகவான் நாராயணன் அவசியம் இருப்பான். துளசி தீர்த்தம் அகால மிருத்யு தோஷத்தை தவிர்க்கும். பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர், கங்கையில் நீராடிய பலனை அடைவர்.

எந்த வீட்டில் காலையிலும் மாலையிலும் “துளசிதேவியை வணங்கி வருகிறார்களோ” யமதேவன் நுழைய முடியாது. நாள்தோறும் ‘‘தீபமேற்றி’’ துளசிதேவியை பூஜிப்பவர்கள் நூற்றுக்கணக்கான யாகம் செய்ததின் பலனை அடைவர். துளசியின் காற்று பட்டாலும், துளசியை வலம் வந்து வணங்கினாலும், எல்லா பாபங்களும் நீங்கும். துளசியை தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும். பகவானது தாமரைப் பாதங்களில் சந்தனம் கலந்து துளசி இலையை ஒட்டுபவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனைப் பெறுவர்.

தேஜஸ்வி

The post தெளிவு பெறுஓம் appeared first on Dinakaran.

Related Stories: