அலைகடல் கடைந்த ஆரமுதே

ஸ்ரீகூர்ம ஜெயந்தி-2.7.2024

“பிறப்பில் பல் பிறவிப்பெருமாள்” என்று பகவானைச் சொல்வார்கள். ஆயினும் அவன் பிறப்பெடுக்கிறான். இதனை வேதம் “அஜாயமானோ பஹூதா விஜாயதே “என்று போற்றுகிறது.
நம் பிறப்பு கர்மத்தின் அடியாகவும், அவன் பிறப்பு கருணையின் அடியாகவும் இருக்கிறது. அவதாரம் என்றாலே மேலே இருந்து கீழே இறங்குவது (descending) என்று பொருள். அப்படி எடுத்த அவதாரங்கள் அதிகம். என்றாலும் சிறப்பாக தசாவதாரத்தைச் சொல்வார்கள்.

தேவுடைய மீனமாய் ஆமையாய்
ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் இராமனாய்க்
கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்
என்பது ஆழ்வார்கள் பாசுரம்.

தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். மகா விஷ்ணுவின் பிற அவதாரங்கள் யாவும் தீயவர்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல், பாற்கடலில் இருந்த பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட அவதாரமாகும். அந்த அவதாரத்தின் சிறப்பையும், அவர் காட்சிதரும் திருத்தலம் பற்றியும், அவரை பூஜிக்க வேண்டிய முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பலன்களையும் இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

1. கூர்ம அவதாரத்தின் பெருமை

கூர்ம அவதாரம் தேவர்களாலும், அசுரர்களாலும் அமுதம் பெறுவதற்காக பாற்கடல் கடையப்பட்டபோது (“சமுத்திர மந்தனம்”) நிகழ்ந்த அவதாரமாகும். தேவரும் அசுரரும் மேரு மலையை மத்தாக வைத்து, வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். ஆனால் மேரு மலை சாய்ந்தது. பாற்கடலை கடைய முடியவில்லை. அப்போது விஷ்ணு, ஆமை உருவம் எடுத்து மேரு மலைக்கு பீடமாகவும் பிடிமானமாகவும் இருந்தார். கூர்ம அவதாரமானது, தொடர்ச்சியாக ‘மோகினி அவதாரம்’ எடுத்து அரக்கர்களை மயக்கியதாகவும் கதை உண்டு. அமிர்தத்தை தேவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்தற்காகவும், அசுரர்களுக்கு இறப்பில்லாத் தன்மை கிடைத்தால் அது ஆபத்தாகி விடும் என்பதாலும், விஷ்ணு, ‘மோகினி அவதாரம்’ எடுத்ததாகவும் உள்ளது.

2. அவதாரத்தின் தத்துவம்

ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. உலகுக்கு ஆதாரமானது கூர்மாவதாரம். கூர்மத்தின் முதுகில் தான் இந்த உலகம் நிற்கிறது என்பதால் ஆதி கூர்மம் என்கிறோம். தைத்ரிய ஆரண்யகத்தில் முதல் பிரச்னத்தில் கூர்மாவதாரப் பெருமை பேசப்படுகிறது.

வேத வல்லுநர்கள் கூர்ம அவதாரத்தை நினைக்காமல் யாகங்களைச் செய்ய மாட்டார்கள். காரணம் அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனமே கூர்ம ஆசனம் என்று தான் சொல்லுவார்கள். யக்ஞ வேதிகை செய்யும்பொழுது கூர்ம பீடத்தின் மேல் உட்கார்ந்து செய்வார்கள். ஆசனத்தை ‘‘ஆதி கூர்மாய நமக’’ என்று மந்திரம் சொல்லி அமர்வார்கள். கோயில் தீபஸ்தம்பம் அடியில் ஓர் ஆமை உருவம் அமைந்திருக்கும். ஆமை என்பது நிலத்திலும் நீரிலும் வாழக்கூடியது.

அது கரையிலே முட்டையிட்டு நீரின் அடியில் இருந்து கொண்டு தன்னுடைய குஞ்சினை உண்டாக்கும். சக்தி படைத்தது. இதை யோகிகள் தீக்ஷா மந்திரத்தில் ஒரு நிலை என்பார்கள். அதாவது குரு தன்னுடைய மனசினாலேயே தூரத்திலிருந்து தோன்றாத் துணையாக சீடனுக்கு ஞானத்தை அளித்தல். இதற்கு மானச தீட்சை அல்லது கமட தீட்சை என்று பெயர். கமடம் என்றால் ஆமை என்று பொருள்.

3. வேதத்தில் கூர்மாவதாரம்

ஸ்ரீமன் நாராயணனின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா தோன்றினார். அவர் உலகத்தைப் படைத்தார். ‘‘தான்தான் படைப்பாளி; தன்னால் தான் உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது’’ என்று அவர் நினைத்தார். அப்போது அவர் எதிரிலேயே ஒரு ஆமை தோன்றியது. அந்த ஆமையைப் பார்த்து ‘‘நீயும் என்னால் படைக்கப்பட்ட ஒரு உயிர்தான்’’ என்று பிரம்மன் கூற, அந்த ஆமை சிரித்தபடி கூறியது.

‘‘நீ தவறாகக் கூறுகிறாய். உன்னால் நான் படைக்கப்படவில்லை. என்னால்தான் நீ படைக்கப்பட்டு இருக்கிறாய்’’ என்று சொல்லிய அந்த ஆமை, தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை பிரம்மாவுக்கு காட்ட, பிரம்மா கூர்மத்தை பலவாறு ஸ்தோத்திரம் செய்தார்.

‘‘நீயே ஆதி-புருஷன். உலகைப் படைக்க வல்லவன் நீயே’’ என்று கூர்மாவதாரம் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளது. கூர்ம அவதாரத்தைப் பற்றி பல்வேறு நூல்களில் பல்வேறு விதமான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 18 புராணங்களில் கூர்ம புராணமும் ஒன்று. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 11 இடங்களிலே கூர்ம அவதாரத்தைப் பற்றி வருகின்றது.

வேதத்தில் மாவினால் புரோடசம் என்று ஒன்றைச் செய்வார்கள். அது அக்னி பகவானுக்கு அளித்தால் தான் யாகம் நிறைவு பெறும். இந்த புரோடசத்தை செய்கின்ற பொழுது கைகளினால் உருட்டி ஒரு ஆமை உருவத்தில் செய்வார்கள். இதற்குக் காரணம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு முறை அங்கிரசுகள் யாகத்தை செய்து சொர்க்கத்தை அடைந்தார்கள். அதன் பிறகு ரிஷிகள் யாகம் நடந்த இடத்தைப் பார்த்தபொழுது அங்கே புரோடசம் கூர்ம ரூபத்தை எடுத்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

அதைப் பார்த்தவுடன் ரிஷிகள் இந்திரனுக்காக நிற்பாயாக, பிரகஸ் பதிக்காக நிற்பாயாக, விஸ்வே தேவர்களின் பொருட்டு நிற்பாயாக என்று வேண்டிக் கொண்டார்கள். ஆனால் அந்த கூர்மம் நிற்கவில்லை. கடைசியில் அக்னியின் பொருட்டு நிற்பாயாக என்று சொல்ல, கூர்மம் நின்று விட்டது. அதனால கூர்ம உருவத்தில் புரோடாசம் அமைய வேண்டும் என்று சூத்திரகாரர்கள் கூறுகின்றார்கள். திருமஞ்சன காலத்திலும் மற்றும் முக்கியமான வேதபாராயணங்களிலும் யாக ஹோமங்களிலும் ஓதப்படும் மந்திரம் புருஷ சூக்தம். அந்த புருஷ சூக்தத்தில் பகவானே கூர்ம அவதாரத்தை எடுத்தார் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

4. சங்க இலக்கியத்தில் கூர்ம அவதாரம்

சங்க இலக்கியத்தில் இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில்
வடவரையை மத்தாக்கி
வாசுகியை நாணாக்கி கடல்வண்ணன்
பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினையே
என்று போற்றிப் பாடுகின்றார்.
பரிபாடலில் கூர்மவதாரம் பற்றிய
செய்திகள் இருக்கின்றன.

5. ஆழ்வார்கள் பாடிய கூர்ம அவதாரம்

ஆழ்வார்கள் அத்தனை பேருமே கூர்ம அவதாரத்தைப் போற்றிப் பாடுகின்றனர்.

வாளமர் வேண்டி வரைநட்டு
நீள் அரவைச் சுற்றிக் கடைந்தான்
என்று பொய்கை ஆழ்வார் பாடுகிறார். அமரர்களுக்காக மந்தர மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்கின்ற நீளமான பாம்பினைக் கட்டி, திருப்பாற்கடலைக் கடைந்தார் கூர்ம பெருமாள் என்று பாடுகின்றார். இப்படிக் கடைந்தது அவர்களுக்கு அமுதம் தருவதற்கே என்பதை குல சேகர ஆழ்வார்
‘‘அலைகடலைக் கடைந்து அமரர்க்கு
அமுதருளிச் செய்தவனே’’
என்று பாடுகின்றார்.

ஆண்டாள் திருப்பாவையில் நிறைவுப் பாசுரத்தில் ‘‘வங்கக் கடல்கடைந்த மாதவனை’’ என்று திருப்பாற்கடலை கூர்மாவதாரம் எடுத்து கடைந்த செய்தியைப்
பாடுகின்றார்.

‘‘பாராருலகம் பரவப் பெருங்கடலுள்
காராமையான கண்ணபுரத்து எம்பெருமாள்’’
என்று திருக்கண்ணபுரம் பெருமாள் கூர்மாவதாரம் தான் என்று ஒரு பாசுரத்தில் சொல்லப்படுகிறது.சுவாமி வேதாந்த தேசிகர் தசாவதார ஸ்தோத்திரத்தைப் பாடுகின்றார்.

தேவர்களுக்கு அமுதத்தை தருவதற்காக எம்பெருமான் பாற்கடலை கடைந்த பொழுது மந்திரமலை கடலில் சாய ஆரம்பித்தது. அது சாயாமல் இருப்பதற்காக பகவான் கூர்மாவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார். அப்பொழுது அந்த தண்ணீரின் குளிர்ச்சியாலும், முதுகில் மந்தர மலையை சுமந்த உணர்த்தியினாலும் பகவானுக்கு தூக்கம் வந்ததாம். திருச்சந்த விருத்தத்தில் திருமழிசை ஆழ்வாரும், ‘‘ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவ’’ என்று பாடுகின்றார்.

கூர்மம் தூங்கும்போது ஆமையின்
மூச்சுக்காற்று வெளியிலே வந்ததாம். அந்த மூச்சுக் காற்றின் வேகத்தினால் மந்திரமலை சுழன்று பாற்கடலைக் கடைந்ததாம் என்று ஒரு அழகான காட்சியை தேசிகர்
சொல்லுகின்றார்,
வடிவு கமடம் என அமர்ந்து
கிரிதனை தரிந்தனை
என்று வேதாந்த தேசிகர் பாடுகின்றார்.

6. கூர்ம அவதாரம்

காட்சியளிக்கும் திவ்ய தேசம் கூர்ம அவதார நிகழ்வுகள் அனைத்தும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கின் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்காக இந்தியாவில் நான்கு ஆலயங்கள் அமைந்துள்ளன: ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் கூர்மை, ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கூர்மம், கருநாடகம் சித்ரதுங்கா மாவட்டத்தில் உள்ள காவிரங்காபூர் மற்றும் மேற்கு வங்காளம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கோகாட் கிராமத்தில் உள்ள சுவரூப்நாராயண் ஆகியவை ஆகும்.

ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், ஆனி மாதம் தேய்பிறை துவாதசியில் கூர்ம ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுவேத மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம் அதன் பின் வந்தவர்களால் திருப்பணி செய்யப்பட்டது. இத் தலத்தில் கருவறைக்குள் கிழக்கு நோக்கி சங்கு சக்கர கதா பத்மங் களோடு ஸ்ரீகூர்ம நாயகி தாயாருடன் ஸ்ரீகூர்மநாதராக அருள்புரிகிறார்.

ஸ்வேத புஷ்கரணி என்ற அற்புதமான திருக்குளம் இங்குள்ளது. ஸ்ரீ சக்கர தீர்த்தம் என்று சொல்வார்கள். உற்சவர் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கட்சி தருகின்றார். பிரகாரங்களில் ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆச்சாரிய பெருமக்கள் இருக்கின்றார்கள். எண்ணற்ற கலைவண்ணங்கள் கொண்ட வண்ண படங்கள், தசாவதாரங்கள், கிருஷ்ண லீலைகள், தலபுராண விளக்க படங்கள் என அற்புதமாக பிராகாரம் காட்சி தருகிறது.அழகான 108 கல் தூண்கள் நம் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஸ்ரீ யோக நரசிம்மர் காட்சி தருகின்றார்.

இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப் பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது.இந்த பகுதியை சுவேத சக்கரவர்த்தி ஆண்டு வந்தான். அவனுடைய பெயரில் தான் ஸ்வேத புஷ்கரணி உள்ளது அவனது ராணியின் பெயர் ஹரிப்பிரியா. கோட்டையின் பெயர் சாலிஹூண்டா. ராணி ஹரிப்பிரியா சிறந்த திருமால் பக்தை.

அவள் பீஷ்ம ஏகாதசி விரதம் இருக்கும் பொழுது காம வயப்பட்ட அரசன் ராணியிடம் செல்ல ராணி விரதம் கெடுமே என பகவானை வேண்ட இருவருக்கும் இடையே வம்சதாரா என்ற ஊற்று பிறந்தது. ராஜா ஏமாற்றத்துடன் கோட்டைக்குத் திரும்பினான். வருத்தத்தில் இருந்து அவனுக்கு நாரதர் ஸ்ரீ கூர்ம மந்திரம் உபதேசித்து இங்குள்ள 8 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தவம் புரியச் சொன்னார். அரசனும் அவ்வாறே கடும் தவம் புரிந்தான். மகாவிஷ்ணு பிரசன்னமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அரசன், திருப்பாற்கடல் கடைந்த பொழுது, எம்பெருமான் எடுத்த ஸ்ரீ கூர்ம அவதாரத்தில் சேவை சாதிக்கப் பிரார்த்தித்தான். பகவானும் அதற்கு இசைந்து தேவை சாதித்தான்.

இந்த ஆலயத்தை பின்னர் பிரம்மன் ஏற்படுத்தியதாகத் தலபுராணம் கூறுகிறது. பகவானே தனது சக்கரத்தால் ஏற்படுத்திய தீர்த்தம்தான் இங்கு உள்ள சக்கர தீர்த்தம் ஆகும். இந்த திருக்குளத்தில் இருந்து தான் தாயார் அவதரித்தாள். கிருத யுகத்தில் பிரம்மன், திரேதா யுகத்தில் லவகுசார்கள், துவாபுர யுகத்தில் பலராமன் ஆகியோர் இங்குள்ள ஸ்ரீ கூர்ம மூர்த்தியை ஆராதித்ததாக தலபுராணம் கூறும்.கலியுகத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இங்கே எழுந்தருளி மங்களாசாசனம் செய்தார்.

7. கூர்ம அவதார சிறப்பு பூஜைகள் பலன்கள்

கூர்ம பூஜையை தேய்பிறை அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். இந்த இரண்டு திதிகளிலும் கூர்ம உருவத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனைப் பூஜை செய்தால் மிகச் சிறந்த பதவிகளையும் பட்டங்களையும் செல்வங்களையும் அடையலாம். நறுமணமிக்க மலர்களாலும் அட்சதைகளாலும் மூல மந்திரத்தைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு பருப்பு நெய்யோடு கூடிய நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். நூறு வருஷம் முறைப்படி பூஜை செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் இந்த இரண்டு திதிகளில் கூர்ம அவதாரத்தை நினைத்து பூஜை செய்வதன் மூலமாக அடையலாம் கூர்ம ஜெயந்தியன்று அவர் தியான சுலோகத்தை பாட வேண்டும்.

ஓம் சங்கு சக்ர தரம் தேவம்
சந்திர மண்டலம் மத்யகம்
ஸ்ரீ பூமி சகிதம் தேவம்
கிரீடாதி விபூஷிதம்
ஸ்ரீவத்ஸ கௌஸ்து போரஸ்கம்
வனமாலா விராஜிதம்
கதா பத்ம தரம் சாந்தம்
கூர்ம கிரீவம் அஹம் பஜே
தசாவதாரத்தில் கூட, நவக்கிரக
அம்சங்கள் உண்டு!

ராமன் சூரியனின் அம்சமாகவும், கிருஷ்ணன் சந்திரனின் அம்சமாகவும், வீரம் நிறைந்த நரசிம்மர் அங்காரகனின் அம்சமாகவும், கல்கி புதனின் அம்சமாகவும், வாமனர் குருவின் அம்சமாகவும், பரசுராமர் சுக்கிரனின் அம்சமாகவும், கூர்மம் சனியின் அம்சமாகவும் வராகம் ராகுவின் அம்சமாகவும், மச்சம் கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது.

பராசரன்

The post அலைகடல் கடைந்த ஆரமுதே appeared first on Dinakaran.

Related Stories: