பணியிடத்தில் துலாம் ராசிக்காரர்கள்

துலாம் ராசி அல்லது துலாம் லக்னத்தைக் கொண்டவர்கள், சுக்கிரன் ஆதிக்கத்தில் இருப்பதாலும், அந்த ராசியில் சனி உச்சம் அடைவதாலும், இவர்கள் நுண்கலை அல்லது அழகுக்கலை சார்ந்தவர்களாகவும், நடிப்பு, நடனம் மற்றும் பல வண்ணங்கள் சார்ந்த தொழில், ரத்ன வியாபாரம், ஜவுளி வியாபாரம், அழகுக் கலை நிபுணர் போன்ற மென்மையான தொழில்களில் ஈடுபட்டு, சிறப்படைவார்கள். சனியும் வலுவாக இருந்தால், இவர்கள் பொதுத்தொண்டு செய்வர். மக்கள் வசியம் உடையவர்களாகத் திகழ்வார்கள். முன்பின் தெரியாதவர்கள்கூட இவர்கள் மீது அன்பும், மதிப்பும் வைத்திருப்பார்கள். அத்தகைய பொதுத்தொடர்பு அலுவலர் பணி இவர்களுக்குச் சிறப்பாக அமையும்.

ஐ.டி.பணியாளர்

சுக்கிரன் ராசியில் பிறந்த துலாம் ராசிக்காரர்கள் பலர், தற்காலத்தில் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றனர். அவுட் சோர்சிங்கில் வேலை செய்யும் சில துலாம் ராசியினர் தங்களை மேனாட்டார் போலவே கருதுவர். ஐ.டி. அல்லது மேனாட்டு நிறுவனங்களில் தமிழ்நாட்டின் வெயில் தெரியாத, வேர்க்காத ஏசி அறை, அலைச்சல் இல்லாத / உடல் உழைப்பு இல்லாத வேலை, நல்ல சம்பளம், உட்கார்ந்த இடத்தில் பாட்டு கேட்டுக் கொண்டும் அல்லது பிறருடன் (chat) அரட்டை அடித்துக் கொண்டும் செய்யும் சொகுசான வேலையாகப் பலருக்கு அமைகின்றது. இருக்கும் இடத்திற்கே இவர்களுக்கு சாப்பாடு வந்துவிடும். சொகுசு கார் வாங்குதல் அதை மாற்றி இன்னொன்று வாங்குதல், சொகுசு நிறைந்த வீடுகள் வாங்குதல், சேமிப்பு மற்றும் சிக்கனம் பற்றிய கவலை இல்லாமல் அடிக்கடி வெளியூர், வெளி நாடுகளுக்குச் சுற்றுலா போவார்கள்.

வெள்ளித்திரை – சின்னத்திரை

துலாம் ராசி ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருவரைப் பார்த்ததும் முதல் பார்வையிலேயே அவர்களைக் கவர்ந்துவிடும் சக்தி உண்டு. இவர்கள் நியாயமானவர்களாகவும் இருப்பர். அதனால் இவர்களுக்கு இயற்கையாகவே ஜனக் கவர்ச்சி அதாவது மக்களைக் கவரும் வசியம் உண்டு. வெள்ளித்திரை, சின்னத் திரை நடிகர், நடிகைகளுக்கு ஜாதகங்களில் சுக்கிரன் வலுவாக இருக்கும்.

விளம்பரம் – மாடலிங்

விளம்பர கம்பெனி மார்க்கெட்டிங் தொடர்பு அதிகாரி போன்ற வேலைகளில் திறமையாக செயல்படும் இவர்கள், விளம்பர வாசகங்கள் எழுதுவது, சந்தைப் படுத்துதலுக்கான யுக்திகள், மக்களிடம் ஒரு திட்டத்தை கொண்டு செல்வதற்கான முயற்சி, அதற்கான படங்கள், பாடல், பின்னணி இசை சேர்ப்பது போன்றவற்றில் திறமையாகச் செயல்படுவார்கள். சிலர் மாடலிங்க் துறையில் சிறந்து விளங்குவர்.

இடர்ப்பாடு மேலாண்மை

துலாம் ராசியினர், இக்கட்டான (problem) காலகட்டங்களில் இடையூறு ஏற்படும் (hurdles) நேரங்களில், இடர்ப்பாடு (risk) உண்டாகும் சமயங்களில் இவர்களின் செயல்பாடு பாராட்டத்தக்கதாக அமையும். இவர்கள் சிறந்த இடர்ப்பாடு மேலாளர்களாக நிர்வாகிகளாக மக்கள் நலப் பணியாளர்களாக செயல்படக் கூடியவர்கள்.

அழகுக்கலை நிபுணர்கள்

துலாம்ராசிப் பெண்கள், அழகுக்கலை நிபுணர்களாக, ஆடை அலங்கார நிபுணர்களாக, நாட்டிய தாரகைகளாக, மாடலிங் செய்யும் பெண்களாக, நடிகைகளாக, மேக்கப் கலைஞர்களாக, பூ அலங்காரம், ரங்கோலி, துணிகளில் பூ வேலை போன்றவை செய்பவர்களாக வெற்றி பெறுவர். கட்டடத் துறையில் ஆர்க்கிடெக்ட்கள், இன்டர்னல் டெக்கரேஷன் போன்ற தொழில்களில் ஜொலிப்பார்கள்.

உளவியல் நிபுணர்கள்

துலாம்ராசி ஆண்களும், பெண்களும் சிறந்த உளவியல் நிபுணர்களாக இருப்பார்கள். ஒருவருடைய பேச்சிலிருந்து அவருடைய மனநிலையை அலசி ஆராய்ந்து அவருடைய தற்காலச் சூழ்நிலை இப்படி இருக்கிறது. முற்காலத்தில் அவர் இப்படி வாழ்ந்திருப்பார், இனிவரும் காலத்தில் இவருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று முக்காலத்தையும் தெளிவாகத் தெரிந்து சொல்கின்ற மனநல நிபுணர்களாக இருப்பதுண்டு. பகுப்பாய்வு என்பது இவர்களின் கூடப் பிறந்தது. ஒரு நொடியில் ஒரு ஆளைப் பற்றிக் கணித்து மிகச் சரியாக மனதுக்குள் இருத்திக்கொள்வார்கள்.

விலக்கி வைத்தல்

துலாம் ராசி ஆண் அல்லது பெண்ணுக்கு வேலை பார்க்கும் இடத்தில் ஏதேனும் ஒரு சூழ்நிலை அல்லது ஒரு ஆளைப் பிடிக்கவில்லை என்றால், அமைதியாக அவர்களை விலக்கி வைத்து விடுவர். நேருக்கு நேராகப் பேசி சண்டையடித்து, அவரைதிட்டுவதோ, அடிப்பதோ கிடையாது. அவருக்குப் பின்னால் அவரைப் பற்றி புறம் பேசுவதும் கிடையாது. தனக்குப் பிடிக்காத வேலைச் சூழல் அமைந்தால், அதைப்பற்றி மற்றவர்களிடம் புலம்புவதும் கிடையாது.

சாது மிரண்டால்

துலாம் ராசிக்காரரைத் தொடர்ந்து சீண்டினால், மிகமிக அரிதாக இவர்கள் மற்றவரை முகத்துக்கு நேராக அவர்களின் மோசமான குணங்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி எடுத்துச் சொல்லி, இனி அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாத வகையில் செய்துவிடுவர். இவருடைய பொறுமை எல்லை கடந்து போகும்போது இவரால் பொறுக்க இயலாத சூழ்நிலையில் எதிரியை நாசப்படுத்தி விடுவார். அசிங்கப்படுத்தி விடுவார். அதன் பின்பு அந்த எதிரி அந்த அலுவலகத்தில் வேலை செய்ய முடியாதபடி கேவலப்படுத்திவிடுவார், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் துலாம் ராசிக்காரர்கள்.

பூவும் புயலாகும்

பொதுவாக பகைச் சூழலை பணியிடத்தில் துலாம் ராசியினர் உருவாக்கிக் கொள்வது கிடையாது. அளவு கடந்து சித்திரவதைக்கு உள்ளாகும் போது, இவர் திருப்பி அடித்தால் உலகம் தாங்காது. ஏனென்றால் சுக்கிரன் அசுரர்களின் குரு திருப்பி அடித்தால் அசுரத்தனமாக அடிப்பார். அந்த நேரத்தில் இவர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். அடி மேல் அடி அடித்து ஆளை அவமானப்படுத்திக் காலி செய்துவிடுவார். பொதுவாக, இது இவர்களின் வாழ்க்கையில் நடப்பது கிடையாது. சுக்கிரன் செவ்வாய் சம்மந்தப்பட்டு இருந்தால், இது போன்ற சில, இவர்களின் உணர்வுகள் வெளிப்படையாகத் தெரியவரும்.

The post பணியிடத்தில் துலாம் ராசிக்காரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: