திருமண வரம் அருளும் கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்

மண்ணாய், விண்ணாய், காற்றாய், நெருப்பாய், நீராய்த் திகழும் சிவப்பரம்பொருள் கருணையின் வடிவாகவும் திகழப் பெறுகின்றார். அவ்வாறு பெருங்கருணையின் ஊற்றாக கருணாஸ்வாமி என்கிற பெயரில் அருள்பாலிக்கின்றார். எங்கு? சோழர்கள் கோலோச்சிய தஞ்சை மண்ணில்தான். பெருவுடையாராக பெருமான் வீற்றருளும் இந்தத் தஞ்சை மாநகரில்…வெண்ணாற்றுக்குத் தெற்கிலும், வீரசோழன் என்னும் வடவாற்றுக்கு வடக்கிலும், இவ்விரு ஆறுகளுக்கும் நடுவே அமைந்துள்ளது கரந்தட்டாங்குடி. தற்போது கரந்தை என்றும் கருணாஸ்வாமி கோவில் என்றும் வழங்கப்படுகின்றது. ஆதியில் இத்தலம் கருந்திட்டைக்குடி என்று அழைக்கப்பட்டுள்ளது. அப்பர் தனது ஆறாம் திருமுறையின் அடைவுத் திருத்தாண்டகத்தில் இடர் களையும் தலங்களுல் ஒன்றாக, வைப்புத்தலமாக இத்திருத்தலத்தை போற்றியுள்ளார்.சப்த ரிஷிகளுள் ஒருவராகவும், தசரத சக்கரவர்த்தியின் குலகுருவாகவும் விளங்கிய ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி கற்புக்கரசியான தனது மனைவி அருந்ததியுடன் [தமிழர்த் திருமணச் சடங்கில்….அம்மி மிதிப்பது… அருந்ததி பார்ப்பது… என்பது காலம் காலமாகத் தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். இந்த அருந்ததி நட்சத்திரமாக வானில் மின்னுகின்றாள்.

அதோடு, பூவுலகில் மனிதர்களுக்கு திருமணம் நடந்திட வரம் வாங்கி வந்தவள்] இத்தலத்தினில் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டுள்ளார். இதனால் இப்பதி ஈசர் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் என்று போற்றலானார்.
கல்லணை கட்டிய கரிகாலச் சோழனுக்கு ஒரு சமயம் கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் பீடித்து வாட்டியது. இந்நோய் தீர…பல்வேறு சிகிச்சைகளையும் மேற்கொண்டார். இருப்பினும், பலனில்லை. சிறந்த சிவபக்தரான இவரது கனவில் தோன்றிய கங்காதரர், கருந்திட்டைக்குடிக்கு வருமாறு கட்டளையிட்டார். கருணாஸ்வாமியின் கட்டளை அல்லவா…..கண்விழித்த கரிகாலன் தனது படைகளுடன் தஞ்சையை அடைந்து, சகோதரன் இராஜராஜன் அரண்மனையில் தங்கினார். அனுதினமும் கருத்திட்டைக்குடியில் வசிஷ்ட தீர்த்தத்தில் நீராடி, மகேசரை மனமொன்றி வழிபட்டார். ஒரு மண்டலம் இவ்வாறு வழிபட்டதன் பலனாக, கருணாஸ்வாமியின் கருணையினால் கருங்குஷ்ட நோய் நீங்கி, பூரண சுகம் பெற்றார். ஈசனது ஆலயத்தையும் திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு நடத்தினார்.தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது இக்கரந்தை சிவாலயம். தஞ்சையை விடவும் மிகவும் பழமை வாய்ந்தது.

சிறிய இராஜகோபுரத்துடனான தென்முக வாயில். இதன் வழியே பக்தர்கள் சென்று வருகின்றனர் உள்ளே… விசாலமான பிரகாரங்கள். கிழக்கு வாயில் ஒன்றும், தெற்கு வாயில் ஒன்றும் காணப்படுகின்றது. கிழக்குப்புற வாயில் முன்பு பிரம்மாண்டமான திருக்குளம். வசிஷ்ட தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. பார்ப்போரை பிரம்மிப்பினில் ஆழ்த்தும் இந்த தீர்த்தம். ஈசன் சந்நதி கிழக்கே முகம் கொண்டுள்ளது. சிவன் சந்நதி கற்றளியாக கவின்மிகு சிற்பங்களைக்கொண்டு வியப்படையச் செய்கிறது. மூலஸ்தானத்தில் அழகிய லிங்கத் திருமேனி கொண்டு அருள்பாலிக்கின்றார் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர். இவர் கருவேலநாதர் என்றும் கருணாஸ்வாமி என்றும்கூட அழைக்கப்படுகின்றார். அம்பாள் சந்நதி தென்முகமாக அமையப்பெற்றுள்ளது. கருவறையுள் சாந்த முகத்துடன் புன்னகை சிந்துகின்றாள் அன்னைஸ்ரீ பிரஹன்நாயகி. இவ்வன்னையை பெரியநாயகி என்றும் திரிபுரசுந்தரி என்றும்கூட வர்ணிக்கின்றனர். நவகோஷ்ட அமைப்பிலான கோஷ்டமாடங்களில்…நடராஜர், பிட்சாடணர், வீணாதர தக்ஷிணாமூர்த்தி, திருமால் பிரம்மா, கங்காதரர், அருந்ததியுடனான வசிஷ்டர், அர்த்தநாரீஸ்வரர், கங்காவிசர்ஜனர் ஆகிய திருவுருவச் சிலைகள் சோழர்கலைபாணியில் அற்புதமாக புடைக்கப்பட்டுள்ளது.

சுவாமி சந்நதிக்கு பின்புறம் தல விருட்சமான வன்னி மரம் உள்ளது. திருமாளிகப்பத்திகள் வவ்வாள் நெற்றியமைப்புடன் அழகுற திகழ்கின்றது. நிருர்த்தி திக்கில் தல கணபதியும், மேற்கில் வள்ளி – தெய்வானை உடனான சுப்ரமணியரும், வாயு பாகத்தில் கஜலட்சுமியும் சந்நதி கொண்டுள்ளனர். மேற்கில் வருணலிங்கம் காணப்படுகின்றது. மழை வராத காலங்களில் இந்த லிங்கத்தை நீரால் மூழ்கச்செய்து மழையை பெறுகின்றனர் தஞ்சை வாழ் பக்தர்கள்.அழகிய ஆலயம். கலைக்கூடமாக திகழ்கிறது. அளவில் பெரிய திருக்குளம். மீண்டும் செல்ல ஆவல் கூடுகிறது. முதலாம் பராந்தகனால் கட்டப்பட்ட இவ்வாலயத்தில், அவரது கல்வெட்டுகள் அதிகமாகக்காணப்படுகின்றது. அதோடு, உத்தம சோழன் மற்றும் முதலாம் இராஜராஜன் கால கல்வெட்டுகளும் காணக் கிடைக்கின்றன. கல்வெட்டில் இத்தல ஈசர் கருந்திட்டை மகாதேவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. சோழர்கள் மட்டுமில்லாது பல்லவர்களும் இவ்வாலய திருப்பணிகளை செய்துள்ளனர். இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட செப்பேடுகள் இங்கே அதிக அளவில் கிடைத்துள்ளன. அதில் நிர்வாகம், நீர்ப்பாசனம், வரிவிதிப்பு, கிராம அமைப்பு உள்ளிட்ட எண்ணற்ற செய்திகள் அடங்கியுள்ளன.

விஜய நகர மன்னர்களின் செப்புத் தகடுகளும் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன.சோழர்களுக்கு பின்னால் ஆட்சிசெய்த நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும்கூட இவ்வாலயத்தைத் திருப்பணி செய்துள்ளனர். மராட்டிய மகாராணிகள் இருவர் கண்ணாடிப் பல்லக்கு ஒன்றையும், வெட்டிவேர் பல்லக்கு ஒன்றையும் தயாரித்து, இவ்வாலயத்திற்கு பரிசாக வழங்கியுள்ளனர்.பங்குனி மாதம் 3, 4 மற்றும் 5ஆம் தேதி களில் சூரிய ஒளி ஸ்வாமி மீது படரும் சூரிய பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அருள் பெறுகின்றனர். வசிஷ்டர் – அருந்ததி திருமண வைபவம் வருடா வருடம் வைகாசி ரோகிணியன்று நடைபெறுகின்றது. அதைத் தொடர்ந்து கொடியேற்றத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் சீரும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன. அதில் 11ஆம் நாள் பிட்சாடணர் கரந்தையில் வீதிவலம் வருவார். 12ஆம் நாள் கண்ணாடிப் பல்லக்கினில் ஸ்வாமி – அம்பாள் புறப்படுகின்றனர். கண்ணாடி பல்லக்கினில் சோமாஸ்கந்தரும், பெரியநாயகி அம்மையும் செல்ல…. வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டரும், அவரது பத்தினியுமான அருந்ததிதேவியும் தொடர்ந்து செல்வர்.

கரந்தை வசிஷ்டேஸ்வரர் (இங்கு)தொடங்கி, வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ் வரர் கோயில், தென்குடிதிட்டைஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில், கூடலூர் சொக்கநாதர் கோயில், கடகடப்பை இராஜராஜேஸ்வரர் கோயில், புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில், தஞ்சை கீழவாசல் பூமாலை வைத்தியநாதர் ஆலயம் ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று காட்சியருளி, மண்டகப்படிகள் ஏற்று, ஏழு ஊர்கள் வலம் வந்து பின்பு கரந்தைக்குத் திரும்புகின்றார். ஏனைய வருடாந்திர சிவாலய விசேடங்களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. தினமும் நான்குகால பூஜைகள் நடந்திடும் இவ்வாலயம் காலை 7:30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8:30 மணி வரையும் திறந்திருக்கும். இவ்வாலயத்தில் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தீர்த்த நீராடி,ஸ்ரீ வசிஷ்டேஸ்வரப் பெருமானை பக்தியுடன் வழிபட, தீராத நோய்கள் தீரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும். அதோடு, திருமணம், உயர்கல்வி, உயர்ப் பதவிகள், ஆட்சித் திறமை, செல்வம், பகை வெல்லுதல், ஆற்றல் ஆகியவற்றையும் பெறலாம். ஸ்ரீ வசிஷ்டேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்பிகைக்கும் திருமண வைபவத்தை நடத்தி, பலரது திருமணத் தடைகள் நீங்கி, சுபிட்சமுடன் வாழ்கின்றனர்.தஞ்சை – கும்பகோணம் சாலையில் தஞ்சையின் ஓர் பகுதியாக திகழ்கிறது கரந்தை என்னும் கரந்தட்டாங்குடி.

பழங்காமூர் மோ.கணேஷ்

The post திருமண வரம் அருளும் கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் appeared first on Dinakaran.

Related Stories: