இசைக்கும் இன்னிசைக்கும் என்ன வித்தியாசம்?

இசைக்கும் இன்னிசைக்கும் என்ன வித்தியாசம்?
– அஸ்வினி, பிச்சாலூர் – கோவை.

இதுதான் வித்தியாசம். மனிதர்கள் பாடுகின்றார்கள் மனிதர்கள் தலையசைக்கின்றார்கள். அனுபவிக்கிறார்கள். அது இசை. அந்த இசையே தெய்வத்திற்கு சமர்ப்பணம் ஆகிறபோது இன்னிசை ஆகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் பார்ப்போம். கண்ணன் குழல் ஊதினான். அது இசையா? இன்னிசையா? இசைதான். காரணம் அவன் ஊதிய குழல் இசையில் உயிர்கள் மயங்குகின்றன. ஆடு, மாடு பறவைகூட
அனுபவிக்கின்றன.

“சிறு விரல்கள் தடவிப் பரிமாற
செங்கண் கோட செய்ய வாய் கொப்பளிப்பு
குருவெயர் புருவும் கூடலிளிப்ப
கோவிந்தன் குழல் கொடு ஊதினபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டு
செவியாட்டக் கில்லாவே’’

ஆண்டாள் பாடிய பொழுது, அந்த கண்ணன் மயங்குகின்றான். எல்லோரையும் மயக்கியவன் யாரோ அவனை மயக்கிய இசை என்பதால், ஆண்டாள் பாடியது இன்னிசை. அதனால் திருப்பாவை முழுவதும் பாடி, பாடி, பாடி என்று பாடுவதையே பிரதானமாகச் சொல்கிறாள். சிந்திப்பதுகூட அப்புறம்தான். வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க என்று சிந்தனையை பின்னாடி வைத்துவிட்டாள். கண்ணனை மயக்கிய இசை என்பதால், ஆண்டாள் பாடிய இசை இன்னிசை. அதனால்தான் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்.

குலசேகர ஆழ்வாருக்கு பெருமாள் என்று பெயர் உண்டா?
– சிவகிரி, அவிநாசி.

உண்டு என்கிறார் கள் பெருமாள் என்றால் வைணவ மரபிலே ராமனைக் குறிக்கும். திருவரங்கநாதனுக்கு பெரிய பெருமாள் என்று பேர். பெரிய பெரிய பெருமாள் என்று சொன்னால், நரசிம்மரைக் குறிக்கும். இப்படி ஒரு மரபு வைணவத்தில் உண்டு. ராமானுஜர் குலசேகர ஆழ்வார் மீது மிகுந்த அன்பு கொண்டவர் அவர் ஒரு தனியனை எழுதுகின்றார். அழகான தமிழ். ஒரு கிளியைப் பார்த்து, ‘‘இங்கே வா, கிளியே, உனக்கு இன்னமுதம் நான் தருவேன். நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? திருவரங்கம் பாடவந்த சீர்பெருமாள் குலசேகர ஆழ்வாரை நீ சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் உனக்கு நான் இனிய அமுதத்தைத் தருவேன்.’’

“இன்னமுதம் ஊட்டு கேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமான் – பொன்னஞ்
சிலைசேர் நுதலியர் வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு’’

திருவரங்கநாதனை பெருமாள் என்று இங்கே குறிப்பிடவில்லை. ஆனால், திருவரங்கநாதனைப் பாடிய குலசேகர ஆழ்வாரை சீர் பெருமாள் என்று குறிப்பிடும் அழகைப் பார்க்க வேண்டும்.

கிருஷ்ணர் தன்னை பிரகஸ்பதியின் சொரூபம் என்று கீதையில் சொல்கிறாரே! பிரகஸ்பதி என்பது யார்?
– தரணிகுமார், திருச்செங்கோடு.

பிரகஸ்பதி என்பவர், தேவ குரு. தேவர்களுக்குக் குருவாக இருந்து அவர்களைக் கட்டிக் காத்தவர் இவர். அங்காரகனைவிட மிகவும் உயரத்தில் இருப்பவர்; ஜனமேஜய மன்னர் சர்ப்ப யாகம் செய்யும்போது, இவர் அதைத் தடுத்து நிறுத்தியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.

The post இசைக்கும் இன்னிசைக்கும் என்ன வித்தியாசம்? appeared first on Dinakaran.

Related Stories: