ஜோதிடத்தில் நிலதோஷம்

பஞ்சபூத தத்துவத்திற்குள் ராசி மண்டலத்துடன் ஒன்றிணைத்துள்ளது என்பது இயற்கையின் அமைப்பு. ராசி மண்டலத்தில் உள்ள ராசிகள் யாவும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற அனைத்தும் உட்பட்டு இருக்கிறது. இதில், ஆகாயம் நட்சத்திரங்களை இயக்கும் வான மண்டலத்துடன் இணைந்துள்ளது. இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட ஆற்றல்களை உள்ளடக்கியது. இதனை மனிதர்களுடனோ அல்லது கிரகங்களுடனோ இணைத்து பார்க்கும் பொழுது, வெவ்வேறாக பிரித்தறியும் திறன் வேண்டும் என்பதே உண்மை. நெருப்பு என்றால் வேகம் என்றும், கோபம் என்றும் தத்துவகாரகமாக கொள்ள வேண்டும். நீர் என்றால் மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டதாகும். நிலம் என்றால், பொறுமை என்ற தன்மையையும் மாறும் தன்மையையும் குறிக்கும். காற்று என்பது நிலையில்லா தன்மையையும், மாறும் தன்மையையும் உணர முடியாத தன்மையையும் குறிக்கிறது.

நிலத்தின் தன்மையும் அதற்குரிய பாவகமும்

பன்னிரெண்டு ராசிகளில் அமரும் கிரகங்களுக்கு தகுந்தவாறு ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு தன்மையை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஜாதகருக்கும் நான்காம் பாவகத்தைதான் (4ம்) நிலம் என்றும் வீடு என்றும் குறிப்பிடப்படுகின்றது. அந்த பாவகத்தில் அமர்ந்துள்ள கிரகம், அந்த பாவகத்தை பார்வை செய்யும் கிரகம் ஆகியவற்றை பொருத்து கிடைக்கப்பெறும் வீடுகளும் அதில் ஜாதகர் பெறும் அனுபவங்களும் மாறுபடுகின்றன. நான்காம் எந்த ராசி பாவகம் வருகிறது என்பதை பொருத்தும் பலன்கள் மாறுபடும்.

நான்காம் பாவகத்தில் (4ல்) சந்திரன் அமர்வதால், அவர் இருக்கின்ற வீடு நீர் தத்துவம் கொண்டதாக உள்ளது. மேலும், அந்த பாவகம் கடகம் ராசியாக இருந்தால், அருகிலோ அல்லது அந்த வீட்டிற்குள்ளோ நீர் இறைக்கும் கிணறு இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்த வீட்டில் எளிதாக நீர் பெறுவதற்கான அமைப்பு ஏற்படுவதை குறிக்கும். மேலும், அந்த வீட்டிற்கு அருகில் கடல், ஆறு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், கடகம் சர ராசியில் அமையப் பெற்ற பாவகம். சரம் என்பது நிலையற்ற தன்மையை குறிப்பதாகும். எனவே, அங்கு மாற்றம் என்பது இருந்து கொண்டே இருக்கும் என்பதை கிரகங்களும் ராசியின் பாவகத்தன்மைகளும் விவரிக்கின்றன. இதை அடிப்படையாக வைத்தே நிலங்களும் அதில் அமையும் வீடுகளும் மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றன.

பத்தாம் பாவகம் (10ம்) என்பது கர்ம ஸ்தானம் என்ற தொழில் செய்யக் கூடிய அமைப்பை விரிவாக்குகிறது, ஜோதிட சாஸ்திரம். அந்த பாவகம் எந்த தன்மையை கொண்ட பாவகம் என்பது அறிதல் வேண்டும். உதாரணத்திற்கு, காலபுருஷத் தன்மைக்கு பத்தாம் பாவகம் மகரமாக வருகின்றது. அந்த மகரம் ராசி சர தன்மை பெற்ற ராசியாக வருகின்றது. அவ்வாறு இருக்கும் போது, மாறிக் கொண்டு இருக்கும் அமைப்பை பெற்ற ராசியாக உள்ளது. இங்கு செவ்வாய் மட்டுமோ அல்லது செவ்வாய் மற்றும் சனி இருந்தால் அதிகமான சப்தம் தரக் கூடிய தொழில்கள் நடைபெறும் பாவகமாக வரையறுக்கப்படுகின்றது. இந்த தொழில்கள் கட்டுமானத் தொழில், சப்தம் தரக் கூடியது என்பது லேத் பட்டறை, காவல்துறை, ராணுவம் போன்றவர்கள் பயிற்சி பெறும் அமைப்பை கொண்ட இடங்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு என்பதை உணர்த்துகிறது. இது போல, கிரகங்களுக்கு தகுந்தாற்போல் மாறிக் கொண்டே இருக்கும்.

நிலத்தில் தோஷம் ஏற்படுதல்

ஒரு ராசியில் சனி அமர்ந்திருந்தால், அந்த நிலத்தில் அதிகமான கர்மதோஷங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆம், சனி கிரகத்தைதான் ஆயுள்காரகன், கர்மகாரகன் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த சனி அமர்ந்த ராசியை அதிகமான அசுபகிரகங்கள் இருந்தாலும், அதிகமான அசுபகிரகங்களின் பார்வைகள் விழுந்தாலும், கண்டிப்பாக பல கர்மங்கள் அந்த நிலத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நாம் இருக்கின்ற இந்த பூமியில் இப்பொழுது நாம் இருக்கிறோம், இதற்கு முன்பு இவ்விடத்தில் பல உயிர்கள் வாழ்ந்து சென்றுள்ளன என புரிந்து கொள்ள வேண்டும். அந்த உயிர்களால் ஏற்பட்ட தோஷங்களால், அவ்வுயிர்கள் இல்லாமல் ேபாயிருக்கலாம். அந்த உயிர்களால் ஏற்பட்ட தோஷம், நிலத்தில் தங்கிவிடுகின்றன. சில காலங்களுக்குபின், அங்கு இருக்கும் வாழும் மனிதர்கள் மற்றும் உயிர்கள் அந்த தோஷத்தால் பாதிக்கப்படும் என்பது ஜோதிடத்தின் மறுக்க முடியாத மற்றும் மாற்ற முடியாத விதி. ஆகவே, ஒரு நிலத்திற்கு தோஷத்தினை ஆய்ந்தறிந்து அவ்விடத்தை நோக்கி நகர்தல் பலன்தரும்.

நில தோஷம் என்ன செய்யும்

சில வீடுகளில் எப்போதும் சறுக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். வரவு அந்த வீட்டிற்கு வரும்பொழுது அனைத்தும் விரயச் செலவுகளாகவே இருக்கும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற சொலவடைக்கு தகுந்தாற்போல இருக்கும். வீட்டில் நிம்மதியற்ற தன்மையை உண்டாக்கிக் கொண்டே இருக்கும். வைத்திய செலவுகளும், சங்கடங்களும் இருப்பதும் புது முயற்சிகள் யாவும் தடைபட்டுக் கொண்டே இருக்கும்.

நில தோஷப் பரிகாரம்

தோஷம் உள்ள நிலத்தின் வடகிழக்கு மூலையில் ஞாயிறு காலையில் சனி ஹோரையில் ஒரு அடி ஆழமும், ஒரு அடி நீளத்திற்கும் ஒரு அடி அகலத்திற்கும் குழி தோண்ட வேண்டும். தோண்டிய அந்த மணல் முழுவதையும் எடுத்து வந்து ஓடும் நீரிலோ அல்லது கடலிலோ கலந்துவிடுங்கள். பின்பு ஆற்றின் கரையோரம் உள்ள புது மணலையோ அல்லது கடலின் கரையோரம் உள்ள மணலையோ எடுத்து வரவும். அதனை, அன்று இரவு 9.00 மணிக்கு மேல் அதனுடன் பஞ்சகவ்யம் எனச் சொல்லக் கூடிய பால், கோமியம், நெய், தயிர், சாணம் ஆகிவற்றை அதிலிட்டு, அதனுடன் கஸ்தூரி மஞ்சளும் சேர்த்து, பின்பு பச்சைகற்பூரம், கல் உப்பு, சர்க்கரை, சுண்ணாம்பு ஆகியவற்றை கலந்து, குழியில் புதுமணலை நீரோடு சேர்த்து நிரப்ப வேண்டும். பின்பு, எலுமிச்சம் பழத்தை கொண்டு திருஷ்டி பலி கொடுத்து, வெண்பூசணியில் கற்பூரம் ஏற்றி தெரு சந்திக்கும் பகுதியில் உடைத்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது ஒரு சிதறுகாயை உடைத்துவிட்டு கை, கால் கழுவி வீட்டிற்குள் நுழையுங்கள். மேலும் உடைத்த வெண்பூசணியை, யார் கால்களிலும் படாதவாறு ஒரு ஓரமாய் தள்ளிவிடுங்கள். இதுவே பரிகாரம்.

The post ஜோதிடத்தில் நிலதோஷம் appeared first on Dinakaran.

Related Stories: