கர்மக் கடனை தீர்க்கும் நாமம்!

சர்வாருணா எனும் நாமத்தின் தொடர்ச்சி…

புருஷன் என்பது ஆண் என்று அர்த்தம் கிடையாது. இங்கு புருஷன் என்கிற சப்தத்திற்கு வஸ்து என்று அர்த்தம். நாம் எந்த வஸ்துவை பரபிரம்மம் என்று சொல்கிறோமே, அந்த வஸ்து இரண்டு நிலைகளில் இருக்கிறது. உபநிஷதத்தில் எந்த வஸ்துவை பிங்களம் என்று சொல்கிறதோ அந்த சத்திய வஸ்துவைத்தான் நாம் சர்வாருணா என்று சொல்கிறோம்.

சர்வா + ருணா… என்று வேறொரு பார்வையில் இந்தப் பதத்தை பிரித்துப் பார்த்தால், ருணம் அல்லது ரிணம் என்றால் கடன் என்று பொருள். இங்கு கடன் என்பது எது என்று பார்த்தால், நம்முடைய கர்மாதான் கடன். கர்ம வாசனைதான் கடன். அப்போது அ – ருணம் என்று சொல்லும்போது கடனே இல்லாதது. அப்போது என்ன அர்த்தமெனில் கர்ம வாசனையினால் தொடமுடியாதது. It can not be touched by any karma vasana… It can’t be touched by conflict. It is untouched. இந்த untouched state இருக்கிறதல்லவா… இதுதான் நம்முடைய சொத்சொரூபம். சர்வாருணா எந்த வகையிலும் ருணம் இல்லாதது. பொதுவாக கடன் இல்லை என்று சொன்னால் எல்லோரும் ஏதோ பண ரீதியாக கடன் இல்லை என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அதைத்தவிர எத்தனையோ கடன் இருக்கிறது. இந்த ஜென்மாவே ஒரு கடன்தான். கர்ம வாசனைகள்தான் முக்கியமான கடனே. ஆனால், ஒரேயொரு கணத்தில் இந்த அத்தனை கடனையும் அடைத்துவிட முடியும். எப்படியெனில் அம்பிகையின் பேரருளால் நம்முடைய சொரூப தரிசனம் கிடைக்கும்போது மொத்த கர்ம வாசனையும் அழிந்துபோய் விடுகிறது. எந்தவிதமான கடனும் கிடையாது.

காஞ்சி மகா பெரியவர் காமாட்சியின் நிறம் சிவப்பு என்பதற்கான சில விளக்கங்களையும் அளிக்கிறார். அவற்றையும் சேர்த்துப் பார்ப்போம் வாருங்கள். பிரம்மமாகச் செயலற்று இருந்த வஸ்துவுக்கு லோகாநுக்கிரகம் என்ற பரம கருணை உதிப்பதைத்தான் காமாட்சி என்று சொல்கிறோம். சுத்த ஸ்படிக ஸங்காசமாக நிறமில்லாதிருந்த பிரம்மம், அப்போது சிவப்பு நிறத்தை அடைகிறது. அன்பு, கருணை இவற்றைச் சிறப்பாகவே சொல்வது வழக்கம். ராகம் (அன்பு), அநுராகம் என்பதிலிருந்தே ரக்தம் (ரத்தம்) என்ற பதம் வந்தது. தமிழிலும் மனச்செம்மை, செவ்விய உள்ளம் என்றெல்லாம் சொல்கிறோம். இதுவே காமாட்சியின் சிவப்பு: கருணையின் வர்ணம்.

மூக பஞ்சசதியில் காமாட்சியின் நிறத்தைச் சொல்லுகிறபோது செக்கச் சிவந்தவள் என்றும் பல இடங்களில் கூறியிருக்கிறார். கருநிறம் படைத்தவள் என்றும் சில ஸ்லோகங்களில் சொல்கிறார். ‘காச்மீர ஸ்தபக கோமாளாங்க லதா’ (குங்குமப் பூங்கொத்து போன்ற கோமளகக் கொடி) ‘பந்து ஜீவகாந்தி முஷா’ (செம்பருத்தியின் ஒளி படைத்தவள்) என்று சொல்கிறார். ‘தாபிஞ்ச ஸதபகத்விஷா’ (கருநீலக் காயாம்பூப்போல் ஒளிருகிறவள்) என்று கூறுகிறார்.

ஏன் இப்படி இரண்டு நிறங்களாகச் சொல்கிறார்? நமக்கு இப்படி ஒருத்தியையே இரண்டு நிறத்தில் சொல்வது புரியவில்லை. சரி, சங்கர பகவத் பாதர்கள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இதைப் பற்றி என்ன சொல்கிறார்?

“ஜயதி கருணா காசித் அருணா” என்கிறது ஸெளந்தர்ய லஹரி. நல்லதெற்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாக சம்பு என்று ஒன்று இருக்கிறது. அது பரப்பிரம்ம வஸ்து. பரப்பிரம்மமாகச் செயலின்றி இருந்தால் போதாது என்று அது லோகத்துக்கு நல்லது செய்வதற்காக ஒரு ஸ்வரூபம் எடுக்கிறது. அதற்குத்தான் அம்பாள் என்று பெயர். நிறமில்லாத சம்பு உலகைக் காக்கும் கருணையினால் அருண வர்ணம் கொண்டு வெற்றியோடு பிரகாசிக்கிறது ‘ஜகத் த்ராதும் சம்போ: ஜயதி கருணா காசித் அருணா’ என்கிறார் ஆசாரியாள். சூரியோதயத்துக்கு முன்னால் கிழக்கில் பரவுகிற பிரகாசச் சிவப்புத்தான் அருணநிறம். ‘அருண நிறம்தான் கருணை நிறம்; அதுவே அம்பிகையின் நிறம்’ என்கிறார் ஆசாரியாள்.

காருண்ய மூர்த்தியாக காமாட்சியைச் சிவப்பானவளாக மூகர் சொல்வதுதான் நியாயமாக்கப்படுகிறது. ராஜ ராஜேசுவரி, லலிதா மஹா திரிபுரசுந்தரி, வித்யா என்றெல்லாம் சொல்லப்படுகிற அம்பாளை மந்திர சாஸ்திரங்களும் செக்கச் செவந்த ஜோதிப்பிரவாகமாகவே சொல்கின்றன. அந்த வித்யா அதிஷ்டான தேவதையின் ஸ்வரூப லட்சணங்களையே பூரணமாகக் கொண்டவள் காமாட்சி. எனவே, பரம்பொருளின் கருணை வடிவான அவளைச் சிவப்பாகச் சொல்வதுதான் பொருத்தம்.
இந்த நாமத்திற்கான கோயிலாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தவிர வேறென்ன சொல்ல முடியும். எனவே, இந்த நாமத்தைச் சொல்லியபடி வீட்டிலுள்ள காமாட்சி அம்மனையோ அல்லது காஞ்சி காமாட்சியையோ தரிசியுங்கள்.

லலிதா சஹஸ்ரநாமம் பிரம்ம வித்யையை நேரடியாகவும் மறைமுகமாகவும் விளக்கவல்லது. எனவே, இதுபோன்ற நாமங்களின் பொருளை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுப் புரிந்துகொண்டு சொல்லும்போது உள்ளே சென்று வேலை செய்யத் துவங்கும். நீங்கள் ஆன்மிகத்தில் எந்தப் படியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த நாமங்கள் அதற்குரிய வேலையை செய்யும். ஏனெனில், இந்த நாமங்கள் வெறும் சப்தங்கள் மட்டும் அல்ல. ஒவ்வொரு நாமங்களும் ஒவ்வொரு கண்கள். அதனால்தான் தேவியை ஆயிரம் கண்ணுடையாள் என்கிறார்கள். உங்களுக்கு அருகே நாமம் வரும்போது, நீங்கள் அந்த நாமத்தை கேட்கிறீர்கள். மனதினால் ஸ்பரிசிக்கிறீர்கள். அதன் பொருள் என்னவெனில், அம்பிகை நாமம் என்கிற கண்கொண்டு உங்களை பார்க்கிறாள். எனவே, நாமத்தை நாமம் என்று கருதாது அம்பிகையின் கண்ணாக பாருங்கள். அப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை அவள் அறிந்தால், அவளும் உங்களை பார்ப்பாள். அப்படிப் பார்த்தால் என்ன ஆகும் என்று சொல்லத்தான் வேண்டுமோ?

அநவத்யாங்கீ அல்லது
அநவத்ய அங்கீ

இந்த நாமத்தின் விளக்கத்தை பார்க்கும்போது நாம் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாமங்கள் அனைத்துமே நம் மனதைத் தாண்டிய அல்லது மனதால் அளக்க இயலாத ஒரு பெரிய வஸ்துவைப் பற்றி பேசுகின்றது. அதனால், நம்முடைய மனம் புரிந்து கொள்ள சிரமப்படும். அப்படி சிரமப் படுவது நல்லதே. இந்த நாமம் கூறுவது புத்தியை தாண்டிய ஒன்று என்பதை நன்கு புத்திப் பூர்வமாக ஆலோசித்து புரிந்து கொள்ள வேண்டும். நன்கு அலசி, குழம்பி அதற்குப் பிறகு வரும் தெளிவே சரியான ஆத்மீகமான பார்வையில் நம்மை கொண்டு செல்லும். ஏனெனில், ஒவ்வொரு நாமமும் நம்முள் சென்று தைக்கும்போது பிரமாண்டமான இந்த பிரபஞ்சத்தின் நடுவே நாம் குமிழிபோல் இருப்பதை உணர்வோம். அப்படி உணர்தலே சரணாகத லட்சணத்தின் முதல்படி.

எனவே, இந்த நாமத்தின் பொருளை நன்கு உள்வாங்கி பொறுமையாக புரிந்து கொள்வோம். புரிந்து கொள்ளும்போதும் நம்மிடமுள்ள அகங்காரம் சிறுத்துப் போகிறது. எந்த இடத்தில் அகங்காரம் சிறுத்துப் போகிறதோ அந்த இடத்தில் அருள் பெருக்கெடுத்து ஓடும். அகங்காரம் அற்ற இடமே அம்பிகையின் ஸ்தானம். இந்த நாமங்கள் அப்பேற்பட்டவளையே விதம்விதமான முறையில் விவரிக்கிறது. ஆனாலும், இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது திணறுகிறது. அந்த திணறல் நமக்கு வரும்போது நாம் மௌனமாவோம். இதை அடிப்படையாக புரிந்து கொண்டு இந்த நாமத்தின் அர்த்தத்தை பார்ப்போம் வாருங்கள்.

இந்த நாமாவான அநவத்யா என்கிற பதத்தில் அவத்யம் என்று பிரித்தால் குறைகள் என்று பொருள். அநவத்யம் என்றால் குறைகளே இல்லாதது என்று அர்த்தம். எந்தவிதமான குறைகளே இல்லாதது. அங்கீ என்றால் அங்கங்களை உடையவள். அநவத்யாங்கீ என்றால் குறைகளே இல்லாத அங்கங்களை உடையவள்.

இதற்கு முந்தைய நாமங்களான மஹாலாவண்ய ஸேவதி, சர்வாருணா, அநவத்யாங்கீ என்கிற இந்த மூன்று நாமங்களும் அம்பிகையின் சகுண ரூபத்தின் குணநலன்களை சொல்வதுபோல் இருக்கிறது. மஹாலாவண்ய ஸேவதி என்று சொல்லும்போது அம்பாளுடைய உயர்ந்த வடிவழகைச் சொல்லிவிட்டு, சர்வாருணா என்று சொல்லும்போது நிறத்தின் அழகைச் சொல்லிவிட்டு, இப்போது அநத்யாங்கீ என்று சொல்லும்போது குறைவற்ற அங்கங்களை உடையவள் என்று சொல்கிறோம். இப்படியாக உயர்ந்த அழகுடைய வடிவம், உயர்ந்த அழகுடைய நிறம் என்று சொன்னார்கள். எந்த உருவமாக இருந்தாலும் இந்த அங்கங்கள் என்று சேர்ந்துதான் அதற்கொரு உருவம் வருகின்றது. இப்போது அம்பிகையினுடைய உருவத்தை சொல்லும்போது இதற்கு முன்னரே கேசாதி பாதாந்தமாக தனித்தனியாக சொல்லியாகி விட்டது. ஒவ்வொரு அங்கத்தையும் தனித்தனியாக சொன்னதற்குப் பிறகு, இந்த நாமத்திலேயே ஏன் அநவத்யாங்கீ என்று சொல்லவேண்டுமெனில், வடிவத்தாலும் நிறத்தாலும் உயர்ந்த அழகுடையவள் என்று சொல்லிவிட்டு, இப்போது சமஷ்டியாக அதாவது முழுமையாக அந்த ரூபத்தைச் சொல்லும்போது அந்த சமஷ்டியான ரூபத்தில் இருக்கக்கூடிய தனித்தனியான அங்கங்கள் இருக்கின்றன அல்லவா… அந்த ஒவ்வொரு அங்கங்களிலேயும் எந்தவொரு குறையும் இல்லாதவள் அல்லது எந்தக் குறையும் சொல்ல முடியாது. இப்பேற்பட்ட சமஷ்டியான உருவத்தில் ஒரு சின்ன குறை இருக்கிறது என்று அம்பிகையிடம் எதுவுமே சொல்ல முடியாது. இருந்தாலும் அந்த இடத்துல ஒரு குறை இருக்கு பாருங்க என்று உலகியல் வஸ்துவில் சொல்லுவோம்.

ஆனால், இங்கு நாம் பேசக்கூடிய வஸ்துவில் குறைகளே கிடையாது. ஏன் அப்படின்னா… அது பூர்ணமான வஸ்து. பூர்ணமான வஸ்துவில் குறை சொல்ல முடியாது. குறைக்கு அங்கு இடமே இருக்காது. ஏனெனில், அது பூர்ணம். உபநிஷதம் எந்த வஸ்துவை பூர்ணமத பூர்ணமிதம் என்று சொல்கிறதோ அந்த பூர்ணமான வஸ்துவாக இருப்பதுனால அந்த வஸ்துவிடம் நாம் சிறிய குறைகூட சொல்ல முடியாது. அந்த அங்கங்களில் எந்த குறையும் கிடையாது.

இது தெரிந்த விஷயம்தானே… கேசாதி பாதாந்த வர்ணனையை பார்க்கும்போதே நமக்கு விளங்கியிருக்குமே… பிறகு ஏன் இந்த இடத்தில் அநவத்யாங்கீ… என்று சொல்லவேண்டுமெனில், அந்த வஸ்துவினுடைய பூர்ணத் தன்மையை நமக்கு காண்பித்துக் கொடுப்பதற்காக மீண்டும் இதை வந்து அநவத்யாங்கீ… என்று வர்ணிக்கிறார்கள். ஒவ்வொரு அங்கங்களையும் வர்ணித்திருப்பதால் இது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருப்பது என்று நினைத்து விடக் கூடாது. அது பூர்ணமான அகண்டமான வஸ்து. நமக்காக சகுண ரூபத்தில் வந்திருக்கிறது என்று காண்பிப்பதற்காக இந்த நாமம்.

பொதுவாக அங்கங்கள் பற்றி பேசும்போது எல்லோரும் சாமுத்ரிகா லட்சணம் சொல்வார்கள். ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு லட்சணம் சொல்லியிருக்கிறார்கள். இப்போது ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு லட்சணம் சொல்லக்கூடிய சாஸ்திரம் இருக்கிறதல்லவா… அதற்கு எது அளவுகோல் எனில் அம்பாளுடைய உருவமே ஆகும். அம்பிகை சாமுத்ரிகா லட்சணப்படி இல்லை. அம்பிகையினுடைய உருவத்தை வைத்துத்தான் சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் தன்னுடைய
அளவுகோலை நிர்ணயம் செய்து கொள்கிறது. ஏனெனில், எல்லா சாஸ்திரங்களும் அம்பிகையிடமிருந்துதானே உற்பத்தி ஆகின்றது. எல்லா சாஸ்திரங்களும் எங்கிருந்து உற்பத்தி ஆகின்றதோ, அவளின் ரூப லாவண்யத்தை வைத்துக்கொண்டுதான் சாமுத்ரிகா லட்சணமே சொல்ல முடியும். அதனால்தான் அம்பிகையை அநவத்யாங்கீ என்கிறார்கள்.

இது எல்லாமே பொதுவான அர்த்தம். இந்த நாமத்திற்கான வெளிப்படையான அர்த்தம். ஆனால், இந்த நாமத்தில் இன்னொரு அத்யாத்மமான விஷயம் இருக்கிறது. என்னவெனில், இதற்கு முன்னால் சொல்லப்பட்ட இரண்டு நாமமான மஹாலாவண்ய ஸேவதி, ஸர்வாருணா… என்கிற இந்த இரண்டு நாமத்தில் ருதஹம்…

சத்தியம் புருஷம் கிருஷ்ண பிங்களம் என்கிற உபநிஷத வாக்கியம்தான் நமக்கு இந்த இரண்டு நாமங்களாக வந்திருக்கிறது என்று பார்த்தோம். பிரம்மம் எப்படி சத்தியமாகவும் ருதமாகவும் இருக்கிறது. இந்த உலகத்தை இயக்கக்கூடிய மாறாத சத்தியமாக இருக்கிறது. அதேநேரத்தில் ஒரு ஒழுங்கு முறையில் மாறாத அழகோடு இருப்பதால் ருதஹம் என்று சொல்கிறார்கள்.

ஒரு சாதகனுக்கு ருதம், சத்தியம் என்கிற இரண்டு விஷயங்கள் தரிசனம் ஆகியிருக்கிறது. இந்த ஆத்ம சாதனையில் முன்னேறக்கூடிய இந்த சாதகனுக்கு பிரம்மமானது இந்த பிரபஞ்ச சிருஷ்டியில மாறாத ஒரு ஒழுங்குத் தன்மை ஒரு அழகோடு இயங்குகிறது. அது ருதம். அந்த இயக்கத்திற்கு உண்மைப் பொருளாக இருக்கிறது அது சத்யம் என்கிற விஷயம் சாதகனுக்கு தரிசனம் ஆகியிருக்கிறது. அப்படி தரிசனம் ஆகும்போது அவனுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. இங்கு கொஞ்சம் ஆழமாகச் சென்று பார்ப்போம் வாருங்கள்.
(சுழலும்)

The post கர்மக் கடனை தீர்க்கும் நாமம்! appeared first on Dinakaran.

Related Stories: