சௌபாக்கியம் அருளும் சௌம்ய நாராயணன்

பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன், அர்ச்சாவதார மூர்த்தமாய் பல்வேறு தலங்களில் அருள்கிறான். அவற்றில் ஒன்று, சென்னை, வில்லிவாக்கத்திலுள்ள சௌமிய தாமோதரப் பெருமாள்
ஆலயம். வில்வ மரங்கள் அடர்ந்த காடாக இந்தப் பகுதி திகழ்ந்ததால் வில்லிவாக்கம் என அழைக்கப்பட்டது. ஊரின் நடுநாயகமாக அழகிய பெரிய மாட வீதிகளுடன், ஏழு கலசங்கள் கொண்ட மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது கோயில். கிழக்கு நோக்கிய கோபுரத்தில் கண்கவர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

கோயிலுக்குள் நுழைந்ததும் முதலில் பலிபீடம், உயர்ந்த கொடிமரம் மற்றும் கருடன் சந்நதியை தரிசிக்கிறோம். அதற்கு நேரெதிரே சௌமிய தாமோதரப் பெருமாளின் கருவறை உள்ளது.

அர்த்தமண்டபத்தின் வலப்புறம் நம்மாழ்வார், இடப்புறம் ராமானுஜர் சந்நதிகள் உள்ளன. துவாரபாலகர்களான ஜெய, விஜயர்களை தரிசித்து கருவறையுள் அருளும் பெருமாளைக் கண்குளிர தரிசிக்கிறோம். திருப்பதி – திருமலையைப்போல ஆனந்த விமானத்தின் கீழ் பெருமாள் அருளுகிறார். அமிர்தவல்லித் தாயாரோடு பெருமாள் அருளும் தலம் இது.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிலா வடிவத்தில் நின்றநிலையில் சேவை சாதிக்கிறார் பெருமாள். மேற்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார். கீழ் வலதுகரம் பயப்படாதே நான் காப்பாற்றுவேன் என்பதை உணர்த்தும் அபய ஹஸ்தமாகவும், கீழ் இடது கரம் உங்கள் துயரம் என் முழங்கால் அளவுதான் என்பதைக் குறிக்கும் ஆக்வான ஹஸ்தமாகவும் உள்ளன. அவர் திருமுன் உற்சவர் உபயநாச்சிமார்களோடு அருள்கிறார். வைகுண்டத்தில் எழுந்தருளியுள்ள மன் நாராயணன், துவாபர யுகத்தில் கண்ணனாக அவதரித்து கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்து பால லீலைகள் புரிந்தவர். அவரே கலியுகத்தில் சௌம்ய நாராயணனாக அருள்கிறார். பெருமாளின் சிலா வடிவில் அடிவயிற்றில் தழும்பு வடுக்கள் அமைந்திருக்கின்றன. கிருஷ்ணாவதாரத்தின்போது யசோதையினால் கட்டப்பட்ட கயிற்றின் தழும்பாக இது கூறப்படுகிறது.

இந்த சௌந்தர்ய உருவம்கொண்ட பெருமாள், புதன்கிரகத்திற்கு அதிதேவதையாகிறார். எனவே, புதகிரக தோஷம் உள்ளவர்கள் புதன்கிழமைகளில் ஜன்ம நட்சத்திரம் வரும் அன்பர்கள் இந்த பெருமாளுக்கு அர்ச்சனை செய்து பச்சைப்பயறு சுண்டல் அல்லது பால் பாயசம் நிவேதித்து புததோஷம் நீங்கப் பெறுகின்றனர்.

பிராகார வலம் வருகையில், சுவரில் தும்பிக்கை ஆழ்வார் தென்திசை நோக்கி அருள்கிறார். அமிர்தவல்லித் தாயார் தனி சந்நதியில் வீற்றிருக்கிறார். தாயாருக்கு எதிரே உயரமான நான்கு கால்களுடன் கூடிய சுக்கிர வார ஊஞ்சல் மண்டபம் உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் தாயார் இந்த மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம். அவருக்கு இரு புறங்களிலும் கண்ணன் சந்நதியும், ராமர் சந்நதியும் உள்ளன. பாற்கடல் கடைந்தபோது தோன்றிய மகாலட்சுமியே இத்தலத்தில் அமிர்தவல்லியாக சேவை சாதிப்பதாக ஐதீகம். நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த நிலையில் பேரெழிலுடன் மேலிரு கரங்கள் தாமரை மலரைத் தாங்க, கீழிரு கரங்கள் அபய – வரதம் காட்டும் அற்புதத் திருக்கோலம். தை மாத வெள்ளிக்கிழமைகளில், இந்த தாயாருக்கு நடக்கும் தோட்டத்து உற்சவம் பெயர் பெற்றது.

ஏகாதசியன்று வெள்ளிக் கிழமை வந்தால், அன்று தாயாரும் பெருமாளும் சேர்ந்து ஆலயவலம் வந்து ஊஞ்சல் சேவை ஏற்றருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும். வெள்ளிக்கிழமையன்று வரும் உத்திர நட்சத்திரத்தன்று லட்சுமி சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், அமிர்தவல்லி அஷ்டோத்திரம் போன்ற பல துதிகள் தேவிக்கு பாராயணமாக செய்யப்படுகின்றன. அப்போது தேன், பேரீச்சை போன்றவற்றை நிவேதிக்கிறார்கள்.

திருமண வரமும், சந்தான வரமும் அருள்பவள் இந்தத் தாயார் என அனுபவப்பட்ட பக்தர்கள் கூறுகின்றனர். ஆண்டாள் சந்நதி பிராகார சுவரில் திருப்பாவை முப்பது பாசுரங்களும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதசியன்று இங்கே பரமபதவாசல் திறக்கப்படுவது கூடுதல் சிறப்பு. சப்த ரிஷிகளில் ஒருவரான அத்ரி மகரிஷியின் குமாரர் துர்வாச முனிவருக்கும் சூரபத்மன் தங்கை அசமுகிக்கும் பிறந்தவர்கள் வில்வலன் மற்றும் வாதாபி. அந்த இருவரும் பிறந்த ஊர் இந்த வில்லிவாக்கம். வில்+வா என்பது மறுவி வில்லிவாக்கம் என்றானதாகக் கூறப்படுவதுண்டு. இருவரையும் ஞான மார்க்கத்தில் வளர்க்க துர்வாசர் விரும்பினாலும் அசுரகுணம் கொண்ட அசமுகி அதை விரும்பவில்லை.

அதனால் அசமுகியை விட்டு காட்டிற்குத் தவம் செய்யச் சென்றார், துர்வாசர். அதனால் முனிவர்களை பழிவாங்கும்படி தன் மகன்களான வாதாபி, வில்வலனுக்குக் கட்டளையிட்டாள், அசமுகி. அவள் கூறியபடியே அண்ணனும், தம்பியும் தவமுனிவர்களைப்போல் வேடம்கொண்டு அவ்வழியே வரும் முனிவர்களை விருந்துண்ண அழைப்பார்கள். தன் மாயா சக்தியால் தம்பியை உணவாகச் சமைத்து விருந்து உபசரித்து அவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் `வாதாபி வெளியே வா’ என அண்ணன் கூறியதும் முனிவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தம்பி வெளியே தாவி வருவான்.

உடனே அந்த முனிவர் இறந்துவிடுவார். அதனால் முனிவர்கள் ஈசனிடம் முறையிட, ஈசன் அகத்தியரை அந்த அசுரர்களை அழிக்கப் பணித்தார். அதன்படி அகத்தியர் இத்தலம் வந்து முனிவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தன் ஞானதிருஷ்டியால் அறிந்தார். வழக்கம்போல் வாதாபி, வில்வலன் அகத்தியரை விருந்துண்ண அழைத்தனர்.

வழக்கம்போல வில்வலன், வாதாபியை உணவாக்கி அகத்தியருக்கு அளித்து தாம்பூலம் தந்து உபசரித்த பின், `வாதாபி வெளியே வா’ எனக் கூறினான். அகத்தியர் சிரித்துக் கொண்டே தன் வயிற்றைத் தடவினார். வாதாபி அப்படியே அவர் வயிற்றில் ஜீரணமாகிவிட்டான். அதனால் கோபம்கொண்ட வில்வலன், அகத்தியரைத் துன்புறுத்தினான். உடனே அகத்தியர் தன் இஷ்டதெய்வமாகிய முருகனையும், சிவனையும், திருமாலையும் பிரார்த்தனை செய்தார். ஈசனும், திருமாலும் அனுமதி தர முருகப் பெருமான் மந்திரம் ஜெபித்து ஒரு அறுகம்புல்லை அஸ்திரமாக வில்வலன் மீது விடும்படி அகத்தியருக்குக் கூறினார். அதன்படியே செய்து வில்வலனை அழித்தார், அகத்தியர். வாதாபி, வில்வலனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் தீர ஈசனை வேண்டினார் அகத்தியர். இந்த வில்வவனத்திலேயே அங்காரக தீர்த்தக் குளம் ஒன்றையும், அகத்தியர் வழிபட சிறிய வெண் ஸ்படிக லிங்கம் ஒன்றையும் அகத்தியருக்கு வழங்கினார், ஈசன். தாங்களும், திருமாலும் இத்தலத்திலே நின்று நிலைத்தருள வேண்டும் என வரம் கேட்டார் முனிவர்.

அதன்படியே ஈசன் அகத்தீஸ்வரராகவும், திருமால் சௌம்யநாராயணப் பெருமாளாகவும் இத்தலத்தில் அருள்கின்றனர் என வில்வாரண்ய மகாத்மியம் எனும் தலபுராணம் கூறுகிறது. இதற்குச் சான்றாக அகத்தீசுவரர் கருவறையில் உள்ள சிவலிங்க திருவுரு போன்றே சிறு வடிவத்தில் இந்த சௌம்யநாராயணர் கோயில் மகாமண்டப இடப்புறத் தூணில் உள்ளது. வைகானச ஆகம முறைப்படி ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் காண்கிறார்கள், இத்தலப் பெருமாளும், தாயாரும்.
சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையத்துக்கு அருகே இருக்கிறது இக்கோயில்.

-ஜெயசெல்வி

The post சௌபாக்கியம் அருளும் சௌம்ய நாராயணன் appeared first on Dinakaran.

Related Stories: