இயேசு கற்பித்த இறைவேண்டல்

கிறிஸ்துவம் காட்டும் பாதை

(மத்தேயு 6:7-13)

இயேசுவின் காலத்தில் இருந்த பல சமயக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு இறைவேண்டல் மாதிரியைப் பின்பற்றி வந்தன. முழுக்கு முனிவர் யோவானின் குழுவினரும் தங்களுக்கு ஒரு இறைவேண்டல் முறையைப் பின்பற்றி வந்தனர். புதிதாகத் தோன்றிய இயேசுவின் குழுவிற்கு ஒரு இறைவேண்டலின் தேவையை இயேசுவின் சீடர்கள் உணர்ந்து, இயேசுவிடம் கேட்டனர். இயேசுவும் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு இறைவேண்டலை அவர்களுக்குக் கற்பித்தார்.

அதைத் தான் ‘‘பரமண்டல ஜெபம்” ‘‘இயேசு கற்பித்த இறை வேண்டல்” என அழைக்கிறோம். பொதுவாக, இயேசு கற்பித்த இறைவேண்டல் நாம் ஏறெடுக்கும் இறைவேண்டலுக்குப் பின், ஏறெடுக்கும் துணை இறை வேண்டல் போல ஏறெடுக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இயேசு கற்பித்த இறைவேண்டல் ஒரு முழுமையான இறைவேண்டல் ஆகும். அதை ஒரு கூட்டு இறைவேண்டல் என்று கூடப் புரிந்து கொள்ளலாம்.

இயேசு எவ்வாறு இறை வேண்டல் செய்ய வேண்டும், எவ்வாறு இறைவேண்டல் செய்யக்கூடாது என்று தம்முடைய மலைப்பொழிவின் போது கற்பித்தார். (மத்தேயு 6:5-14). ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர், இயேசு கிறிஸ்து கற்பித்தவற்றை சற்றும் மதிப்பதில்லை. அவர்கள் தாங்கள் பின்பற்றும் சமய குருக்கள் அருட்பணியர் எவ்வாறு இறைவேண்டல் செய்கிறார்களோ அதை அப்படியே பின்பற்றுகின்றனர்.

அவர்களின் குரல், உச்சரிப்பு, மொழி நடையாவும் அவர்கள் பின்பற்றும் சமயத் தலைவர்களை முழுமையாகச் சார்ந்து உள்ளது. ஆனால், இயேசுகிறிஸ்து இறைவேண்டல் செய்வது பற்றி கூறி இருப்பது என்ன?

1) இறைவேண்டல் செய்யும் போது வெளிவேடக்காரரைப் போல் இருக்கக் கூடாது.

2) பிறர் நம்மைப் பார்க்க வேண்டும் பிறர் நம்மைப் புகழவேண்டும் என்று எண்ணி இறைவேண்டல் செய்யக் கூடாது.

3) உள்ளறைக்குள் சென்று வேண்டுதல் செய்ய வேண்டும்.

4) இறைவேண்டலில் பிதற்றல் இருக்கக் கூடாது. நன்கு ஆயத்தம் செய்து, சூழல் அறிந்து, மிகவும் பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.

5) மிகுதியான சொற்கள் திரும்பத் திரும்ப வரும் இடைச் சொற்கள் தவிர்ப்பது நல்லது.

6) நீண்ட நேரம் இறைவேண்டல் செய்தால்தான் பக்திமான் சிறப்பாக இறைவேண்டுபவர் என நம்புகிறோம் சான்றிதழ் அளிக்கிறோம். இது தவறு.

7) இயேசு கற்பித்த இறைவேண்டல் மிகவும் சிறியது. எளிமையான ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கியது ஆகும்.

8) இயேசுகிறிஸ்து கூறும் போது கடவுள் நம் தேவையை அறிந்தவர் என்பதை நினைவூட்டுகிறார்.

9) நாம் பிறருக்காக மன்றாடும் போது நாம் நமது அக்கரையை வெளிப்படுத்துகிறோம். மற்றபடி கடவுளுக்குப் பிறரின் பரிந்துரை தேவையில்லை என்பதை நாம் உணரவேண்டும்.

10) நாம் கடவுளிடம் மன்றாடுகிறோம் என்பது நினைவிருக்கட்டும். கடவுளுக்குக் கட்டளைகளை பிறப்பிக்கக்கூடாது. அதிகார தொனியில் மன்றாட்டுகளை ஏறெடுத்தல் கூடாது. நமது மன்றாட்டுகள் இனிமையாகவும், மென்மையாகவும் தெளிவோடும் இருப்பது சிறப்பு.

11) இயேசு கற்பித்த இறைவேண்டலைப் பல முறை கருத்தோடு படித்து அதில் இருக்கும் உண்மைகளைப் புரிந்து கொண்டு அதன்படி வாழமுயற்சிப்போம்.

12) இயேசுகிறிஸ்துவைவிட சிறந்த ஆசிரியர் வேறு யார் நமக்குக் கிடைப்பார்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post இயேசு கற்பித்த இறைவேண்டல் appeared first on Dinakaran.

Related Stories: