மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட அரியானாவை சேர்ந்த இந்திய இளைஞர், உக்ரைனில் நடந்த போரில் பலியானார். பிரதமர் மோடி ரஷ்யா சென்று வந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம் கைதால் மாவட்டம் மாதவுர் கிராமத்தை சேர்ந்த ரவி மவுன் (22) என்ற இளைஞர், கடந்த ஜனவரி 13ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு அவருக்கு போக்குவரத்து துறையில் வேலை கிடைத்ததாக கூறினார். ஆனால் அந்நாட்டு ராணுவத்தில் ஏஜென்டுகள் மூலம் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டார். இவ்விவகாரம் குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு கடந்த 21ம் தேதி ரவி மவுனின் சகோதரர் அஜய் மவுன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தூதரகம் வெளியிட்ட கடிதத்தில், ‘உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடந்து வரும் நிலையில், ரவி மவுன் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி உள்ளார்.
அவர் ரஷ்யா சார்பில் உக்ரைன் பகுதியில் போரில் ஈடுபட்ட போது அங்கு உயிரிழந்தார். அவரது உடலை அடையாளம் காணும் வகையில், அவரின் ரத்த சம்பந்தமான உறவினரின் டிஎன்ஏ அறிக்கையை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தூதரகம் கேட்டுக் கொண்டது. சமீபத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றும் இந்திய குடிமக்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ரவி மவுனின் மரணச் செய்தி இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்திய இளைஞர் உக்ரைனில் பலி appeared first on Dinakaran.