வீடுகளை சுத்தம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை: இரண்டரை மணி நேர தூய்மை பணிக்கு ரூ.4,500 முதல் ரூ.10,000 வரை வசூலிக்கும் நிறுவனங்கள்

சென்னை: மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தண்ணீர் வடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் வீடுகளில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்ய ஆட்கள் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான முதியவர்கள், மக்கள் நிவாரண முகாம் மற்றும் விடுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வீடுகளை சுத்தம் செய்ய ஆன்லைன் நிறுவனங்கள் இரண்டரை மணி நேரத்திற்கு ரூ.4,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியது. பல அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்கள், உறவினர் வீடுகள், விடுதிகளில் தங்கியுள்ளனர். வெள்ள நீர் பாதித்த பகுதிகளில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்த துரித நடவடிக்கையால் 85 சதவீத இடங்களில் வெள்ள நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. 15 சதவீதம் பகுதிகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் அப்பகுதிகளில் மட்டும் தற்போது ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் வெள்ள நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், பெருங்குடி, நீலாங்கரை, மேற்கு தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், வண்டலூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம் மற்றும் வடசென்னையில் பெரும்பாலான இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கழிவுநீர், சேறு, சகதி புகுந்த வீடுகளில் தண்ணீர் வடிந்தும், மக்கள் தங்களது வீடுகளுக்குள் குடியேற முடியாமல் தவித்து வருகின்றனர். சில இடங்களில் வீட்டு உரிமையாளர்களே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தனியாக வசிக்கும் முதியவர்கள், குழந்தைகளுடன் வசிக்கும் தம்பதிகள் பலர் தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் உதவியை நாடியுள்ளனர். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் பலர் வீடுகளை சுத்தம் செய்ய ஆன்லைன் நிறுவனங்களில் முன்பதிவு செய்கின்றனர்.

பதிவு செய்த நேரத்தில் இருந்து 12 மணி முதல் 24 மணி நேரம் கழித்துதான் சுத்தம் செய்ய வருகின்றனர். அதுவும் ஒரு வீட்டிற்கு இரண்டரை மணி நேரம் மட்டும்தான் நேரம் ஒதுக்குகின்றனர். 2 படுக்கையறை வீட்டுக்கு கட்டணமாக ரூ.4,500ம், 3 படுக்கை அறைகள் மற்றும் அதற்கு மேல் உள்ள வீட்டிற்கு ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இது வெறும் வீட்டில் உள்ள தரைகள், கழிவறைகள் மட்டும் சுத்தம் செய்ய கட்டணம் தான். மழையால் பாதித்த பொருட்கள் சுத்தம் செய்ய கிடையாது. அதற்கு தனி கட்டணம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பிரபல ஆன்லைன் துப்புரவு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: புயல் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்திற்கு மட்டும் கடந்த 2 நாட்களில் ஆன்லைன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை சுத்தம் செய்ய பதிவு செய்துள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் முன்பதிவு செய்துள்ளது இதுவே முதன்முறை. இதனால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்துள்ளோம். சம்பந்தப்பட்ட வீட்டிற்கு எங்கள் ஆட்கள் சென்றதும், வீடு முழுவதும் செல்போனில் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள்.

அதன்படி அந்த வீட்டிற்கு எவ்வளவு நேரத்தில் சுத்தம் செய்ய முடியும் என்று நாங்கள் கணக்கீட்டு அவர்களிடம் கூறுவோம். அதன்படி அவர்கள், அந்த வீட்டை குறைந்தது இரண்டரை மணி நேரத்திற்குள் முடித்துவிட்டு, எங்களிடம் முன்பதிவு செய்துள்ள மற்றொரு வீட்டுக்கு சென்று விடுவார்கள். நிறைய அழைப்புகள் வருவதால் சுத்தம் செய்ய குறுகிய நேரம்தான் ஒதுக்க முடிகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் முழுமையாக ஒரு வீட்டை சுத்தம் செய்ய முடியவில்லை’’ என்றார்.

* பேக்கேஜிற்கு ஏற்ப சேவை
தூய்மைப்பணியில் ஈடுபடும் ஆன்லைன் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வீட்டை சுத்தம் செய்ய, எங்கள் நிறுவனம் பலவிதமான பேக்கேஜ் உள்ளது. ஆன்லைனில் வீட்டின் உரிமையாளர் எந்த பேக்கேஜ் பதிவு செய்கிறாரோ அந்த பேக்கேஜ் மட்டும் தான், எங்கள் ஊழியர்கள் செய்வார்கள். தூய்மை பணிக்கு தேவையான அனைத்தும் எங்கள் பொருட்களும் நாங்களே வைத்துள்ளாம். வீட்டின் உரிமையாளரிடம் நாங்கள், துய்மை பணிக்கு தேவையான தண்ணீர் தவிர, வேறு எதையும் கேட்பது இல்லை. வேறு வேலைகள் செய்ய மாட்டார்கள். ஆனால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் வீடுகளில் முதலில் குடியேறும் வகையில் வீட்டின் தரைகள், கழிவறைகள் மட்டும் சுத்தம் செய்யும் பேக்கேஜ் மட்டும் தான் நாங்கள் எடுத்து வருகிறோம். மற்ற பேக்கேஜ்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்’’ என்றார்.

* மோட்டார் பம்புகளுக்கு எகிறியது வாடகை
வீடுகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வாடகை மோட்டார் பம்புகள் கிடைக்காமல் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர். மோட்டார் பம்புகளுக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள் வாடகை தொகையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர். ஒரு வீட்டில் மழைநீரை அகற்றிக் கொண்டிக்கும் போதே இன்னொரு ஆர்டர் வந்து, அதை விட கூடுதலான தொகைக்கு கேட்டால் உடனடியாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்டரை கேன்சல் செய்து விட்டு அதிக வாடகை தரக்கூடியவர்களுக்கு வீடுகளுக்கு எடுத்து சென்று விடுகின்றனர். ஒரு மணி நேரத்துக்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை கேட்கின்றனர். பலர் இதைவிட அதிகமாக கேட்கின்றனர் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

The post வீடுகளை சுத்தம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை: இரண்டரை மணி நேர தூய்மை பணிக்கு ரூ.4,500 முதல் ரூ.10,000 வரை வசூலிக்கும் நிறுவனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: