6000 கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள் வருகை: சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகள் வரவேற்பு

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று மாலை கேலோ இந்தியா 2023 விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் விமானம் மூலமாக சென்னைக்கு வந்தனர். அவர்களை விமானநிலையத்தில் அரசு அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தமிழ்நாட்டில் முதன்முறையாக இன்று (19ம் தேதி) முதல் சென்னை நேரு விளையாட்டரங்கம் உள்பட தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 பெருநகரங்களில் கேலோ இந்தியா 2023 விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதிவரை நடைபெறுகின்றன.

இப்போட்டிகளை இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று துவக்கி வைக்கிறார். இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், 1,600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் வந்துள்ளனர். அவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் தங்கும் விடுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தமிழ்நாட்டில் நடைபெறும் கேலோ இந்தியா 2023 விளையாட்டு போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுவர்கள், 1,200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த ஆண்டு மொத்தம் 27 விளையாட்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் முதல்கட்டமாக, சென்னையில் இன்று ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம்பெறுகிறது. இதில், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், சோதனை அடிப்படையில் இடம்பெறுகிறது. இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக, தமிழக அரசின் சார்பில் அனுமதி சீட்டுகளை வழங்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 6000 கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள் வருகை: சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: