பேரையூர் பகுதிகளில் புழுத்தாக்குதலில் மாங்காய் மகசூல் பாதிப்பு

*நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பேரையூர் : பேரையூர் அருகே மாமரங்களில் புழுத்தாக்குதல் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேளாண்துறை உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரையூர் அருகேயுள்ள சாப்டூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியிலுள்ள பாளையம் பழிச்சியம்மன் கோவில் அருகில் அதிகமான மாந்தோப்புகள் உள்ளன. இங்குள்ள மாமரங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேன் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில பருவநிலை மாறி மழை பெய்ததால் மாமரங்களில் பூ, பிஞ்சு, காய், காய்க்கும் நேரத்தில் புழுத்தாக்குதல் ஏற்பட்டு பூ பிஞ்சு காய்களை புழுக்கள் கடித்து தின்று மாங்காய்களை குடைந்து, காம்புகளை கடித்து வருவதால் மாங்காய் மற்றும் பிஞ்சுகள், மரத்திலிருந்து கீழே உதிர்ந்து விழுகின்றன.

இப்பகுதியில் மாமரங்களில் புழுத்தாக்குதலால் இப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மா விளைச்சல் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் உள்ள மாமரங்கள் புழுத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

விவசாயி சுந்தரமூர்த்தி கூறுகையில், ‘‘நான் 25 ஏக்கரில் மாமரங்களை பராமரித்து வருகிறேன். கடந்த முறை மாங்கா மகசூல் ரூ.10 லட்சம் கிடைத்தது. இந்த முறை அளவுக்கு அதிகமான புழுத் தாக்குதலால் ரூ.1 லட்சம் அளவில் கூட மகசூல் பெற முடியாத நிலை உள்ளது. குளிர்ந்த நேரங்களில் புழுக்கள் பூ, பிஞ்சு, காய்களை, தின்று சேதப்படுத்தியும், இரவு நேரங்களில் அதிகமான புழுக்கள் மாந்தோப்பில் சத்தம் கேட்கும் அளவிற்கு கடித்து தின்று பாழாக்குகிறது.

ரூ.3 லட்சம் செலவில் புழுக்களை ஒழிக்க மருந்து தெளித்துள்ளேன். அவை ஒழியாமல் புழுக்களின் உற்பத்தியைப் பெருக்கி கொண்டு போகிறது. உழவு, மரங்களின் தூரில் மண் அணைப்பது, உரம் வைத்த செலவுகளை பார்க்கும்போது உழுத கூலி கூட கட்டாது. மேலும் சேடபட்டி வட்டார வேளாண்மைத்துறை அதிகாரிகள் இதுவரை இப்பகுதிகளுக்கு வந்ததே கிடையாது. அவர்கள் புழுதாக்குதலை கட்டுப்படுத்த உதவ வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.

The post பேரையூர் பகுதிகளில் புழுத்தாக்குதலில் மாங்காய் மகசூல் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: