காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியாக உள்ள கவரை தெருவில் உள்ள பி.எஸ்.சீனிவாசா மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, பள்ளி வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரை தெரு பகுதியில், பி.எஸ்.சீனிவாசா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

இங்கு, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த, பள்ளி வளாகத்திலேயே ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்எஸ்ஏ திட்ட அலுவலகம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற அலுவலம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மழையின்போது தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில தினங்களாக இரவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த தண்ணீர் வடிந்து செல்வதற்கு எந்த வசதியும் செய்யப்படாததால் மழைநீர் வெளியேற வழியின்றி பள்ளி வளாகத்திலேயே தேங்கியுள்ளது. இதனால், பகல் நேரத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சிறுமழை பெய்தால் கூட வகுப்பறைகள், விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால், மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஜூரம், சளி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றது.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘ஒவ்வொரு மழைகாலத்திலும் இந்த பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக தான் உள்ளது. இப்படி தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால், மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், படிப்பும் பாதிக்கப்படும்.

வகுப்பறை கட்டிடங்களும் பாதிக்கப்படும். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி, விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் மேம்பாடு அடைவதுடன் பள்ளி வளாகம் சுகாதாரமானதாகவும் இருக்கும்’ என்றனர்.

The post காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: