சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பைபர் படகு மூலம் போதை விழிப்புணர்வினை துவக்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அமைச்சர் காசிமேடு கடல் பகுதியில் பைபர் படகு மூலம் போதை விழிப்புணர்வினை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். பாரிமுனையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று “சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை” முன்னிட்டு, மாலை, N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம் சார்பில் ‘‘பைபர் படகுகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு‘‘ நிகழ்ச்சியை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 50 படகுகளில் போதை ஒழிப்பு வாசகங்களை படகுகளில் கட்டி, கடலில் நின்றபடி, விழிப்புணர்வை ஏற்படுத்த, கடற்கரையில் இருந்த சுமார் 600 மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.

மேலும், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர், நடிகை கலந்து போதை ஒழிப்பு குறித்து எடுத்துரைத்தனர். மேலும், போதை ஒழிப்பு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வடக்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.R.V.ரம்யாபாரதி, இ.கா.ப, துணை ஆணையாளர்கள் துணை ஆணையாளர் பவன் குமார் ரெட்டி, இ.கா.ப (வண்ணாரப்பேட்டை), திருமதி.ஸ்ரேயா குப்தா, இ.கா.ப., (பூக்கடை), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல, நேற்று மாலை, C-1 பூக்கடை காவல் நிலையம் பின்புறம், என்.எஸ்.சி. போஸ் சாலையில், பூக்கடை காவல் மாவட்டம் சார்பில், ‘‘போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி‘‘ நடைபெற்றது. பூக்கடை பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மனித சங்கிலியில் கலந்து கொண்டு, போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பூக்கடை காவல் மாவட்ட துணை ஆணையாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா, இ.கா.ப., உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

The post சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பைபர் படகு மூலம் போதை விழிப்புணர்வினை துவக்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Related Stories: