மிக்ஜாம் புயல், மழை பாதிப்பில் மீண்ட பிறகு காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்: விலை அதிகரித்த போதிலும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்

சென்னை: மிக்ஜாம் புயல், மழை பாதிப்பில் மீண்ட பிறகு காசிமேட்டில் நேற்று மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. விலை அதிகரித்த போதிலும் மீன்களை மக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இங்கு கொண்டு வரப்படும் மீன்கள் ப்ரஸாக இருக்கும் என்பதால் சென்னை மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தில் இருந்தும் மீன்களை வாங்க மக்கள் வருவார்கள்.

ஆனால், கடந்த 2 வாரமாக மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து குறைந்த அளவிலான படகில்தான் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனால், மீன் வரத்து குறைந்து கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன்மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல், மழை பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க அதிகாலை 4 மணி முதலே மக்கள் வரத் தொடங்கியது.

நேரம் ஆக, ஆக எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தனர். அதே நேரத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 200க்கும் மேற்ப்பட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பினர். அவர்களுக்கு பெரிய வகையான மீன்கள் அதிக அளவில் கிடைத்து இருந்தது. அதே நேரத்தில் மீன் விலையும் கடந்த வாரத்தை விட நேற்று கிலோ 200 முதல் 300 வரை அதிகமாக இருந்தது. அதாவது வஞ்சிரம் ரூ.1200, வெள்ளை வவ்வால் ரூ.1000 வரைக்கும் விற்பனையானது.

இதே போல சங்கரா, சீலா, பெரிய இறால், நண்டு போன்ற மீன்கள் ரூ.100 முதல் ரூ.150 வரை விலை அதிகமாக இருந்தது. சங்கரா கிலோ ரூ.500, பெரிய இறால் ரூ.450, சீலா ரூ.600, நண்டு ரூ.300 என்ற வகையில் விற்பனையானது. எனினும் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் காசிமேடு மீன்பிடி சந்தை நேற்று களைகட்டியதை பார்க்க முடிந்தது. நல்ல விலை கிடைத்ததால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post மிக்ஜாம் புயல், மழை பாதிப்பில் மீண்ட பிறகு காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்: விலை அதிகரித்த போதிலும் போட்டி போட்டு வாங்கி சென்றனர் appeared first on Dinakaran.

Related Stories: