தொடரும் மேக மூட்டம், சாரல் மழை

ஊட்டி : நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்பின் அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடக்கு கிழக்கு பருவமழை பெய்யும். இடைபட்ட சமயங்களில் மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும். ஆனால், இம்முறை குறித்த சமயத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை.

அதே சமயம் தாமதமாக துவங்கினாலும் மழை தீவிரம் அடையவில்லை. அவ்வப்போது லேசான மழை மட்டுமே பெய்தது. அதேபோல் வடகிழக்கு பருவமழையும் உரிய சமயத்தில் துவங்கினாலும் இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக மழை சற்று குறைந்து காணப்பட்டது. இரவில் நீர் பனி கொட்டி வந்தது. பகலில் வெயில் அடித்து வந்தது. ஆனால், மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. நாள்தோறும் குன்னூர், மஞ்சூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், பகல் நேரங்களில் கடும் மேகமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேக மூட்டத்திற்கு இடையே வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

வெயில் மற்றும் பனி விழ வேண்டிய சமயத்தில் கடந்த ஒரு வார காலமாக மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருவதால் தேயிலை செடிகள் மற்றும் மலைக்காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், தொடர்ந்து உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், இம்மாதம் இறுதியில் உறைபனி கொட்டி விடும் என்ற அச்சத்திலும் விவசாயிகள் உள்ளனர்.

The post தொடரும் மேக மூட்டம், சாரல் மழை appeared first on Dinakaran.

Related Stories: