மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி கிராமங்களின் நம்பிக்கையை காங்கிரஸ் அரசுகள் உடைத்தன: பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

ரேவா: கிராமங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் காங்கிரஸ் அரசுகள் நடத்தி, அதன் நம்பிக்கையை உடைத்தன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். தேசிய பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று மத்தியபிரதேச மாநிலம் ரேவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு அதிக காலம் ஆட்சி செய்த கட்சி, கிராமங்களின் நம்பிக்கையை உடைத்தது. அவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது. 2014ம் ஆண்டுக்கு பின்னர் கிராமங்களில் உள்ள மக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு பள்ளிகள், சாலைகள், மின்சாரம், சேமிப்பு குடோன்கள், பொருளாதாரம் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியின் போது கண்டுகொள்ளப்படவில்லை.

ஏனெனில் முந்தைய காங்கிரஸ் அரசுகளுக்கு ஒரு கிராமம் வாக்கு வங்கியாக தெரியவில்லை. எனவே அவற்றை புறக்கணித்தன. 2014ம் ஆண்டுக்கு பின் பஞ்சாயத்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடானது, ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு ரூ.70 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கீடு இருந்தது. கிராமங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் குடியேறி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* கேரளாவில் மோடி கவர்னருக்கு அனுமதி மறுப்பு
பிரதமர் மோடி கேரளாவில் 2 நாள் பயணமாக நேற்று மாலை 5 மணிக்கு கொச்சி வெலிங்டன் தீவில் உள்ள கடற்படை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்தார். அவரை வரவேற்க கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் கொச்சி கடற்படை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கும் பட்டியலில் இருந்து கவர்னரின் பெயர் திடீரென நீக்கப்பட்டது. இந்த விவரத்தை கவர்னர் ஆரிப் முகம்மது கான் கொச்சிக்கு சென்ற பின்னர் தான் அவரிடம் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. தொடர்ந்து நேற்று காலை கவர்னர் திருவனந்தபுரம் திரும்பினார்.

கொச்சியில் பிரதமர் மோடிக்கு அரசு நிகழ்ச்சிகள் எதுவும் கிடையாது. இதனால் தான் பிரதமரை வரவேற்கும் பட்டியலில் இருந்து கவர்னர் நீக்கப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. இன்று காலை திருவனந்தபுரம் வரும் மோடியை விமான நிலையத்தில் கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் வரவேற்பார்கள். இதற்கிடையே கொச்சி தேவரா சந்திப்பு முதல் தூய இருதய கல்லூரி வரை நடந்த ரோடு ஷோவில் மோடி கலந்து கொண்டார். யுவம் 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்று திருவனந்தபுரம் செல்லும் மோடி அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

The post மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி கிராமங்களின் நம்பிக்கையை காங்கிரஸ் அரசுகள் உடைத்தன: பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: